search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவனந்தபுரம் அருகே போலீஸ் நிலையத்தை சூறையாடிய கம்யூனிஸ்டு தொண்டர்கள்
    X

    திருவனந்தபுரம் அருகே போலீஸ் நிலையத்தை சூறையாடிய கம்யூனிஸ்டு தொண்டர்கள்

    திருவனந்தபுரம் அருகே கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்ட தகவல் பரவியதும் தொண்டர்கள் போலீஸ் நிலையத்தை சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் அருகே வெள்ளறடையைச் சேர்ந்தவர் பிரின்ஸ் (வயது 25). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் இளைஞர் இயக்கமான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அந்த பகுதி பொறுப்பாளராக உள்ளார்.

    இவர் மீது வெள்ளறடை, நெய்யாற்றின்கரை உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் ஏராளமான அடிதடி வழக்குகள் உள்ளது. இந்த வழக்குகள் தொடர்பாக அவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் வெள்ளறடை பஸ் நிலையம் அருகே வைத்து பிரின்சை வெள்ளறடை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரசாந்த் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அதன் பிறகு அவரை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    பிரின்ஸ் கைது செய்யப்பட்ட தகவல் பரவியதும் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் வெள்ளறடை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பிரின்சை உடனே விடுவிக்கக்கோரி அவர்கள் கோ‌ஷங்களை எழுப்பினார்கள். திடீரென்று போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர்.

    இதில் போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த போலீசாரின் வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தது. மேலும் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடி, ஜன்னல் கண்ணாடிகளையும் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த கல்வீச்சில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரசாந்த்துக்கு காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து கூடுதல் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் இருந்த பிரின்ஸ் மயங்கி விழுந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்காக ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டது. போலீசார் தாக்கியதில்தான் பிரின்ஸ் மயங்கியதாக கூறி கம்யூனிஸ்டு தொண்டர்கள் மீண்டும் கல்வீச்சில் ஈடுபட்டனர்.

    இதில் ஆம்புலன்சின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது. உடனே போலீசார் கம்யூனிஸ்டு தொண்டர்களை சமரசப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் காரணமாக வெள்ளறடை போலீஸ் நிலையமே போர்களம்போல காட்சி அளித்தது.

    இன்ஸ்பெக்டர் பிரசாந்த் நெய்யாற்றின்கரை அரசு ஆஸ்பத்திரியிலும், பிரின்ஸ் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    Next Story
    ×