search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிக ரொக்க பண நடமாட்டமே ஊழலுக்கு முக்கிய காரணம்: பிரதமர் மோடி சொல்கிறார்
    X

    அதிக ரொக்க பண நடமாட்டமே ஊழலுக்கு முக்கிய காரணம்: பிரதமர் மோடி சொல்கிறார்

    ஊழலுக்கும், கருப்பு பணம் பதுக்கலுக்கும் அதிக அளவில் ரொக்க பணம் நடமாட்டம் இருப்பதே காரணம் என்று பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததன் பின்னணி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி லிங்டுஇன் இணையதளத்தில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    21-வது நூற்றாண்டின் இந்தியா ஊழல் இல்லாத இந்தியாவாக இருக்க வேண்டும். நாட்டில் நடக்கும் ஊழல்தான் இந்த தேசத்தின் வளர்ச்சியை தடுத்து கொண்டு இருக்கிறது. அதோடு ஏழைகள், நடுத்தர மக்களின் கனவுகளையும் சீர் குலைக்கிறது.

    இந்த ஊழலுக்கும், கருப்பு பணம் பதுக்கலுக்கும் அதிக அளவில் ரொக்க பணம் நடமாட்டம் இருப்பதே காரணம் ஆகும். எனவே, ரொக்க பணத்தின் பயன்பாடுகளை குறைப்பது அவசியமாகிறது. இதற்காகவே இதுபோன்ற முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம்.

    நான் அனைத்து மக்களையும் குறிப்பாக இளைஞர்களையும் கேட்டுக்கொள்வது என்னவென்றால் இந்த மாற்றத்தை நீங்கள் தலைமை ஏற்று செய்யுங்கள். ரொக்க பணபரிமாற்றத்தை இல்லாமல் செய்து புதிய முறைக்கு மாறுங்கள். அப்படி செய்தால் ஊழல் அல்லாத கருப்பு பணம் இல்லாத இந்தியாவை கட்டமைக்க நாம் அடித்தளம் அமைக்கலாம்.

    இன்றைய கால கட்டத்தில் மொபைல் வங்கி, மொபைல் வாலட்ஸ் என புதிய உலகத்தில் இருக்கிறோம். உணவு, பர்னிச்சர்கள் போன்றவற்றை கூட மொபைல் போன் மூலம் ஆர்டர் செய்து பயன்படுத்துகிறோம். வாடகை கார்களை கூட இதை பயன்படுத்தி அழைக்கிறோம்.

    இவற்றுக்கெல்லாம் மொபைல் போன்கள் பயன்படும் போது மற்றவற்றுக்கும் இதை பயன்படுத்துவதற்கு ஏராளமான சாத்தியங்கள் உள்ளன. இன்றைக்கு தொழில்நுட்பங்கள் பல்வேறு வேகமான வசதிகளை நமது வாழ்க்கைக்கு அளிக்கிறது.

    டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இ-வாலட்ஸ் போன்றவற்றை உங்களில் பலர் தொடர்ந்து பயன்படுத்துகிறீர்கள். இதன் மூலம் ரொக்க பணம் பரிமாற்றம் அல்லாத வர்த்தகத்தை அதிகரிக்க அனைத்து சாதகங்களும் உள்ளன.

    நான் நவம்பர் மாதம் 8-ந்தேதி எடுத்த முடிவு (பெரிய ரூபாய் நோட்டு செல்லாது) மூலம் சில்லறை வர்த்தகத்தினருக்கு ஒரு நல்ல வாய்ப்பை அளித்து இருக்கிறேன். இதன் மூலம் இந்த நாட்டை பொருளாதார ரீதியாக மாற்றுவதற்கு நீங்கள் முக்கிய பங்கை அளிக்கிறீர்கள்.

    இந்த வரலாற்று நிகழ்வில் சில்லரை வர்த்தகத்தினர் உங்களை புதிய தொழில்நுட்பத்துக்கு மேம்படுத்தி கொள்ள வேண்டும். இது, உங்களை இன்னும் பெரிய அளவில் முன்னேற்றம் அடைய செய்யும்.

    நான் கொண்டு வந்த திட்டத்தால் மக்கள் அசவுகரியத்தை சந்திப்பார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். ஆனால், இந்த பாதிப்புகள் எல்லாம் சில குறுகிய காலம் மட்டும்தான். இந்த குறுகியகால வேதனை உங்களுக்கு நீண்டகால லாபத்தை தரப்போகிறது. எனவே, இதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

    இந்த குறைந்த கால கஷ்டத்தால் நீங்கள் அடைய போகும் நீண்ட கால நன்மையை நினைத்து உண்மையிலேயே நான் சந்தோ‌ஷம் அடைவேன்.

    நான் சமீப நாட்களாக உத்தரபிரதேசம், கர்நாடகா, கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்தேன். கிராமம் மற்றும் நகர மக்களை சந்தித்தேன். அவர்களிடம் நான் ஊழலையும், கருப்பு பணத்தையும் ஒழிக்க ஏழைகளும், நடுத்தர மக்களும் தங்களது பங்களிப்பை தர வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அனைவரும் நாங்களும் எங்கள் பங்களிப்பை தருவோம் என்று கூறினார்கள்.

    இவ்வாறு நரேந்திர மோடி கூறி இருக்கிறார்.
    Next Story
    ×