search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    37 பேரை நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் மீண்டும் வலியுறுத்தல்: மத்திய அரசு தகவல்
    X

    37 பேரை நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் மீண்டும் வலியுறுத்தல்: மத்திய அரசு தகவல்

    43 பேரின் பெயர்களை திருப்பி அனுப்பியதில் 37 பேரை நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு ‘கொலிஜியம்’ மீண்டும் வலியுறுத்தி உள்ளது என பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
    புதுடெல்லி:

    43 பேரின் பெயர்களை திருப்பி அனுப்பியதில் 37 பேரை நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு ‘கொலிஜியம்’ மீண்டும் வலியுறுத்தி உள்ளது என பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

    நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அமைத்து பிறப்பித்த சட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. மேலும், வழக்கத்தில் இருந்து வருகிற ‘கொலிஜியம்’ முறையை (சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதிகளை கொண்ட குழு) மேலும் வெளிப்படையானதாக மாற்றும் வகையில், மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து வழிமுறை குறிப்பாணையை (எம்.ஓ.பி.) உருவாக்குமாறு மத்திய அரசை சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக்கொண்டது.
    இதை வகுப்பதில் மத்திய அரசுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில், பழைய ‘கொலிஜியம்’ முறை பின்பற்றப்படுகிறது.

    இந்த நிலையில் நாட்டில் உள்ள பல்வேறு ஐகோர்ட்டுகளில் நீதிபதிகளாக நியமிக்க 77 பெயர்களை கொண்ட பட்டியலை மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு ‘கொலிஜியம்’ அனுப்பியது. அதில் 34 பெயர்கள் நியமனத்துக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டதாகவும், மீதி 43 பேரது பெயர் பட்டியல், கொலிஜியத்துக்கு மறுபரிசீலனைக்கு திரும்ப அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்தது.

    ஆனால் மத்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்ட அந்த 43 பேரின் பெயர்களை நீதிபதிகள் நியமனத்துக்காக மீண்டும் வலியுறுத்தி இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதி ஏ.ஆர்.தவே அமர்வு அறிவித்தது.

    இது தொடர்பாக பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய சட்டம், நீதித்துறை ராஜாங்க மந்திரி சவுத்ரி எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    நீதிபதிகள் நியமனத்துக்கு 77 பேரது பெயர்கள் கொண்ட பட்டியலை சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் அனுப்பியது. அதில் 34 பேரை அரசு பல்வேறு ஐகோர்ட்டுகளில் நீதிபதிகளாக நியமனம் செய்து விட்டது. 43 பேரது பெயர்களை மறுபரிசீலனைக்காக கொலிஜியத்துக்கு மத்திய அரசு திருப்பி அனுப்பியது.

    அதில் 37 பேரின் பெயர்களை நியமனத்துக்காக சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் மீண்டும் வலியுறுத்தி உள்ளது. 3 பேரின் பரிந்துரையை சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் ஒத்தி போட்டுள்ளது. 3 பேரது பரிந்துரைகளை கொலிஜியம் தன்னிடம் வைத்துக்கொண்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×