search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழைய நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிராக தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு
    X

    பழைய நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிராக தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு

    500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிராக பல்வேறு மாநில ஐகோர்ட்டுகளில் தொடரப்பட்ட வழக்குகளுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது.
    புதுடெல்லி:

    500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிராக பல்வேறு மாநில ஐகோர்ட்டுகளில் தொடரப்பட்ட வழக்குகளுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது.

    ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது, இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்க முடியாது என்று கடந்த 15-ந் தேதி கூறியது.

    இதேபோல் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஐகோர்ட்டுகளிலும் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. இந்த வழக்குகள் அனைத்தையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று 17-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு முறையிட்டது.

    இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு பொதுநல வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி வாதாடுகையில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என வெளியிடப்பட்டுள்ள மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிரான வழக்கை சுப்ரீம் கோர்ட்டு மட்டுமே விசாரிக்க முடியும் என்றும், பல்வேறு மாநிலங்களின் ஐகோர்ட்டுகள், கீழ்க்கோர்ட்டுகளில் உள்ள வழக்குகள் அனைத்தையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    கடந்த காலத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக பல்வேறு கோர்ட்டுகளில் தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்ததையும் அப்போது அவர் சுட்டிக் காட்டினார்.

    அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், பல்வேறு பிரச்சினைகள் இருப்பதால், ஐகோர்ட்டுகளில் தொடரப்பட்ட வழக்குகளால் மக்கள் உடனடியாக நிவாரணம் பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும், இதனால் அங்கு தொடரப்பட்ட வழக்குகளுக்கு தடை விதிக்க முடியாது என்றும் கூறினார்கள்.

    மேலும் அட்டார்னி ஜெனரலிடம், இந்த பிரச்சினை குறித்து மத்திய அரசு தேவையான நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்று கருதுகிறீர்களா? தற்போதைய நிலைமை என்ன? இதுவரை எவ்வளவு பணம் சேகரிக்கப்பட்டு உள்ளது? என்றும் கேள்வி எழுப்பினார்கள்.

    இதற்கு அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி பதில் அளிக்கையில், ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து வங்கிகளில் இதுவரை ரூ.6 லட்சம் கோடிக்கும் அதிகமாக டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதாகவும், மின்னணு முறையிலான பண பரிவர்த்தனை அதிகரித்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

    மேலும், தற்போது நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், கடந்த 70 ஆண்டுகளாக நாட்டில் குவிக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை ஒழிப்பதை நோக்கமாக கொண்டுதான் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவிக்கும் முடிவை மத்திய அரசு எடுத்ததாகவும் அவர் கூறினார். ரொக்க பணபரிவர்த்தனை உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 4 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்பது பொதுவிதி என்றும், ஆனால் அது இந்தியாவில் 12 சதவீதம் என்ற தகவலையும் அப்போது அவர் தெரிவித்தார்.

    மத்திய அரசு நிலைமையை தினந்தோறும் கண்காணித்து வருவதாகவும், இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி கூறினார்.

    தொடர்ந்து அவர் வாதாடுகையில், மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களின் ஐகோர்ட்டுகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் அல்லது ஏதேனும் ஒரே ஒரு ஐகோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    இதைத்தொடர்ந்து, மத்திய அரசின் இந்த கோரிக்கை தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு கோரி பல்வேறு ஐகோர்ட்டுகளில் வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    அத்துடன் வழக்கு விசாரணையை வருகிற டிசம்பர் 2-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
    Next Story
    ×