search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைவர் பதவியில் இருந்து சோனியா விலக முடிவு
    X

    தலைவர் பதவியில் இருந்து சோனியா விலக முடிவு

    பஞ்சாப், உத்தரபிரதேச சட்டசபை தேர்தலுக்கு பிறகு தலைவர் பதவியில் இருந்து சோனியா விலக முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சிக்கு ராகுல்காந்தியை தலைவர் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது.

    தற்போது காங்கிரஸ் தலைவராக உள்ள சோனியாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால், அவர் கட்சிப் பணிகளை ராகுலிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்குவது நலலது என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    ஆனால் ராகுல் பிரசாரம் செய்யும் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு தொடர் தோல்வி ஏற்படுவதால் இப்போது தலைமை பொறுப்பை அவருக்கு விட்டுக் கொடுக்க, சோனியா தயக்கம் காட்டுகிறார். இதைத் தொடர்ந்து டெல்லியில் சமீபத்தில் நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் சோனியாவுக்கு, அவரது பதவிக் காலத்தை இன்னும் ஓராண்டுக்கு நீட்டித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    இந்த நிலையில் அதே கூட்டத்தில் ராகுலை தலைவர் ஆக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் விரைவில் கூட்டப்படும் என்றும், அதில் ராகுலுக்கு தலைவர் பதவி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.

    குறிப்பாக வரும் 19-ந்தேதி இந்திரா காந்தி பிறந்த தினத்தன்று ராகுல் தலைவராகும் அறிவிப்பு வெளியாகும் என்று காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவித்தன. ஆனால் தற்போது அதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

    பஞ்சாப், உத்தரபிரதேசம், கோவா மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான நடைமுறைகள் தொடங்கிவிட்டன.

    எனவே அந்த தேர்தலுக்குப் பிறகு ராகுலிடம் தலைவர் பதவியை ஒப்படைக்க சோனியா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ராகுல், காங்கிரசுக்கு தலைவர் பொறுப்பை ஏற்பது மீண்டும் ஒரு தடவை தள்ளிப்போகிறது.
    Next Story
    ×