search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இஸ்லாமாபாத்தில் இருந்து 8 தூதரக அதிகாரிகளை இந்தியா வாபஸ் பெறுகிறது
    X

    இஸ்லாமாபாத்தில் இருந்து 8 தூதரக அதிகாரிகளை இந்தியா வாபஸ் பெறுகிறது

    பாகிஸ்தானின் நிர்ப்பந்தத்தால், இஸ்லாமாபாத்தில் இருந்து 8 இந்திய தூதரக அதிகாரிகளை வாபஸ் பெற இந்தியா முடிவு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    பாகிஸ்தானின் நிர்ப்பந்தத்தால், இஸ்லாமாபாத்தில் இருந்து 8 இந்திய தூதரக அதிகாரிகளை வாபஸ் பெற இந்தியா முடிவு செய்துள்ளது.

    இந்தியாவில் உளவு வேலை பார்த்ததாக பாகிஸ்தான் தூதரக அதிகாரி மெக்மூத் அக்தர் என்பவரை இந்தியா சமீபத்தில் வெளியேற்றியது. அதற்கு பதிலடியாக, இஸ்லாமாபாத்தில் பணியாற்றி வரும் இந்திய தூதரக அதிகாரி ஒருவரை பாகிஸ்தான் வெளியேற்றியது. இதனால், இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவி வருகிறது.

    இதற்கிடையே, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த 6 அதிகாரிகள் நேற்று இந்தியாவை விட்டு வெளியேறினர். இந்திய அரசு, தங்களை அச்சுறுத்தி வருவதால், தங்களால் இந்தியாவில் பணியாற்ற முடியாது என்று அவர்கள் தரப்பில் கூறப்பட்டது.

    இச்சம்பவம் நடந்த அடுத்த சில மணி நேரங்களில், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வரும் 8 அதிகாரிகளின் பெயர்களை பாகிஸ்தான் தனது இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிட்டது. அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்வது போல் அது அமைந்தது.

    இதனால், அந்த அதிகாரிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலும் எழுந்தது.

    இதையடுத்து, வேறு வழியின்றி அந்த 8 அதிகாரிகளையும் இந்தியா வாபஸ் பெற உள்ளது. இத்தகவலை மத்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

    அதே சமயத்தில், இந்தியாவை விட்டு வெளியேறிய பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள், தாங்களாகவே சென்றதாகவும், அவர்களை வெளியேறுமாறு, தாங்கள் உத்தரவிடவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதற்கிடையே, எல்லை பகுதியில், நேற்று முன்தினம் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதல்களில் 8 பேர் உயிரிழந்தனர். இதற்கு பாகிஸ்தான் துணைத்தூதரை நேரில் அழைத்து தனது கடும் கண்டனத்தை பதிவு செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, பாகிஸ்தான் துணைத்தூதர் சையத் ஹைதர் ஷாவை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று நேரில் அழைத்தது. அவரும் நேரில் ஆஜர் ஆனார்.

    அவரிடம், காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லையில் பாகிஸ்தானின் தொடர் தாக்குதல்களால் அப்பாவி மக்களும், இந்திய வீரர்களும் உயிரிழந்து வருவது குறித்து இந்தியாவின் கடும் கண்டனம் பதிவு செய்யப்பட்டது. இத்தகைய தாக்குதல்கள் தொடர்வதால் இந்தியா மிகுந்த கவலை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் தீபாவளிக்கு முந்தைய நாளில் (அக்டோபர் 28-ந் தேதி) காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியை பாகிஸ்தான் படையினர் உதவியுடன் பயங்கரவாதிகள் தாண்டி வந்து, தாக்குதல் நடத்தி இந்திய வீரர் மன்தீப் சிங்கை (வயது 30) சுட்டுக்கொன்று, அவரது உடலை வெட்டி சிதைத்து வீசிய சம்பவம் குறித்தும், மத்திய அரசு தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்தது.

    இது தொடர்பாக மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லை பகுதிகளில், அமைதிக்கு விரோதமான எந்த செயல்களிலும் பாகிஸ்தான் ஈடுபடல் ஆகாது என்பது மத்திய அரசின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது என அந்த நாட்டின் துணைத்தூதரிடம் தெரிவிக்கப்பட்டதுÓ என கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×