search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உளவு பார்த்த விவகாரம்: நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு உத்தரவு
    X

    உளவு பார்த்த விவகாரம்: நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு உத்தரவு

    இந்திய ராணுவ ரகசியங்களை உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பாகிஸ்தான் தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    காஷ்மீரில் குழப்பம் விளைவிக்கும் பாகிஸ்தானின் முயற்சி பலிக்காததால் எல்லையில் பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில் டெல்லியில் ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர் உளவு பார்த்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

    டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் அதிகாரியாக வேலை பார்ப்பவர் முகமத் அக்தர். இவர் இந்திய ராணுவத்தின் ரகசியங்களை உளவு பார்த்து வந்தது தெரிய வந்தது. ஏற்கனவே அவரை மத்திய உளவுத்துறை கண்காணித்து வந்தது. இன்று அவரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து இந்திய ராணுவ நிலைகள் அமைந்து இருக்கும் வரை படங்கள், இந்திய படைகளின் நடமாட்டம், ராணுவ வீரர்களின் எண்ணிக்கை மற்றும் பாதுகாப்புத் துறை சம்பந்தமான ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    அவர் கைது செய்யப்பட்டது பற்றி டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் அப்துல்பாசித்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் தூதரை நேரில் ஆஜராகுமாறு வெளியுறத்துறை சம்மன் அனுப்பியது.

    இதற்கிடையே தூதரக அதிகாரி கைதானது அறிந்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. அவர் தூதர் அந்தஸ்து அதிகாரி என்பதால் விடுதலை செய்யுமாறு கூறியது. இதையடுத்து முகமத் அக்தரை டெல்லி போலீசார் விடுத்தனர். உளவு பார்த்த விவகாரம் தொடர்பாக அவர் 24 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

    முன்னதாக தூதரக அதிகாரி முகமத் அக்தரிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர்.

    அவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் அவருக்கு உடந்தையாக பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்தியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பெயர் சோயிப், சுபாஷ் ஜாங்கிர், மவுலானா ரம்ஸான்.

    இவர்கள் 3 பேரும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. இயக்கத்துக்கு கடந்த 1½ ஆண்டுகளாக உளவு பார்த்து வந்தனர். பல்வேறு ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி வந்துள்ளனர்.

    கைதான தூதரக அதிகாரி முகமத் அக்தரிடம் இருந்து போலி ஆதார் அட்டை பறிமுதல் செய்யப்பட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×