search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரபிரதேசத்தில் நீக்கப்பட்ட 4 மந்திரிகளை மீண்டும் சேர்க்க முடிவு: சமாஜ்வாடி உட்கட்சி பூசலுக்கு புதிய சமரச தீர்வு
    X

    உத்தரபிரதேசத்தில் நீக்கப்பட்ட 4 மந்திரிகளை மீண்டும் சேர்க்க முடிவு: சமாஜ்வாடி உட்கட்சி பூசலுக்கு புதிய சமரச தீர்வு

    உத்தரபிரதேசத்தில் நீக்கப்பட்ட 4 மந்திரிகளை மீண்டும் சேர்த்துக்கொள்ள சமாஜ்வாடி முடிவு செய்து உள்ளது.
    லக்னோ:

    உத்தரபிரதேச முதல்-மந்திரி அகிலேஷ் யாதவுக்கும், அவருடைய சித்தப்பாவும் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவர் சிவபால் சிங்குக்கும் இடையே அண்மையில் மோதல் ஏற்பட்டது. அமர்சிங் எம்.பி.க்கு ஆதரவாக சிவபால் சிங் செயல்பட்டதாக கூறி அவர் உள்பட நரத் ராய், ஓம்பிரகாஷ் சிங், ஷதாப் சயீதா ஆகிய 4 மந்திரிகளை அகிலேஷ் யாதவ் அதிரடியாக நீக்கினார்.

    மகனின் தடாலடி நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த சமாஜ்வாடியின் தேசிய தலைவரான முலாயம்சிங், அகிலேஷுக்கு ஆதரவாக செயல்பட்ட தனது இன்னொரு தம்பியும், டெல்லி மேல்-சபை எம்.பி.யுமான ராம்கோபால் யாதவின் தேசிய செயலாளர் பதவியை பறித்தார். இதனால் அகிலேஷ் யாதவ்-சிவபால் சிங் இடையே பனிப்போர் வெளிப்படையாக வெடித்தது.

    அடுத்த ஆண்டு உத்தரபிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கட்சியில் விரிசல் பெரிதாகிக் கொண்டு போவதை முலாயம் சிங் விரும்பவில்லை. இதற்கு தீர்வு காண கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டத்தை நேற்று முன்தினம் கூட்டினார். இந்த கூட்டத்தில் முலாயம் சிங் முன்னிலையிலேயே மோதல் ஏற்பட்டதால் கட்சி கூட்டம் பாதியிலேயே முடிந்து போனது.

    இதைத்தொடர்ந்து முலாயம் சிங்கை அவருடைய வீட்டுக்கு சென்று சிவபால் சிங் சந்தித்தார். இதேபோல் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவும் தந்தையை தனியாக சந்தித்தார். இருவரும் 3 முறை சந்தித்தும் எந்த சமரசமும் ஏற்படவில்லை.

    இந்த சமரச முயற்சி 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. முலாயம் சிங்கை இருவரும் தனித்தனியே சந்தித்தனர். ஆனால், நேற்றுகாலை பல்வலியால் அவதிப்பட்டதால் ஓய்வெடுத்த முலாயம் சிங் மூத்த தலைவர்கள் முன்னிலையில் எந்த புதிய சமரச பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.

    நேற்றும் முன்தினம் உயர்மட்டக் குழு கூட்டத்தில் தெரிவித்த கட்சியின் மாநில தலைவராக சிவபால் சிங் நீடிப்பார், அகிலேஷ் யாதவ் முதல் மந்திரியாக இருப்பார் என்ற சமரச திட்டத்தையே முலாயம் சிங் வலியுறுத்தினார்.

    அப்போது, அகிலேஷ் யாதவ் தரப்பில் சிவபால் உள்பட நீக்கப்பட்ட 4 மந்திரிகளையும் உடனடியாக மந்திரிசபையில் சேர்த்துக் கொள்வது என ஒப்புக் கொள்ளப்பட்டது.

    அதேபோல் அகிலேஷ் யாதவ் ஆதரவாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி வேட்பாளர்களை அகிலேஷ் யாதவ், சிவபால் சிங் சேர்ந்து தீர்மானிப்பார்கள் என்றும் நீக்கப்பட்ட அகிலேஷ் யாதவ் ஆதரவாளர்கள் அனைவரையும் தீபாவளிக்கு பின்னர் கட்சியில் சேர்த்துக் கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

    பின்னர், முலாயம் சிங் வீட்டில் நிருபர்களுக்கு பேசிய சிவபால் சிங், “கட்சியிலும், முலாயம் குடும்பத்திலும் எல்லாம் நன்றாக இருக்கிறது. நான் முலாயம் சிங்குடன் இருக்கிறேன். அவர் என்ன உத்தரவு இட்டாலும் அதன்படி நடந்து கொள்வோம்” என்றார்.

    இதையடுத்து நீக்கப்பட்ட மந்திரிகளை மீண்டும் நியமிப்பது குறித்து கவர்னருக்கு அகிலேஷ் யாதவ் கடிதம் அனுப்புவார் என்றும் அவர்கள் விரைவில் பதவி ஏற்பார்கள் எனவும் சமாஜ்வாடி வட்டாரங்கள் தெரிவித்தன.

    சிவபால் சிங் ஆதரவு தலைவர் ஒருவர் கூறும்போது, மீண்டும் மந்திரி பதவி ஏற்க சிவபால் மறுத்துவிட்டார். அவர் இனி கட்சிக்காக மட்டுமே பணியாற்றுவார் என்று தெரிவித்தார்.

    முன்னதாக நேற்று காலை அவர் கட்சி தலைமை அலுவலகத்தில் மந்திரி காயத்ரி பிரசாத் மற்றும் நீக்கப்பட்ட மந்திரி ஓம்பிரகாஷ் சிங் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். நேற்று முன்தினம் கட்சி கூட்டத்தில் அகிலேஷ்-சிவபால் ஆதரவாளர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் நேற்று சமாஜ்வாடி தலைமை அலுவலகம் முன்பாக நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். அந்த பகுதி உள்ள சாலைகளில் தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டன.

    இதற்கிடையே, சமாஜ்வாடி எம்.எல்.சி. அஷு மாலிக் நேற்று மந்திரி பவான் பாண்டே மீது போலீசில் புகார் கொடுத்தார். அதில் தன்னை பவான் பாண்டே முதல்-மந்திரி வீட்டில் இருந்தபோது கடுமையாக தாக்கினார் என்று கூறி இருக்கிறார்.

    இந்த நிலையில் நேற்று பிற்பகல் 2.30 மணி அளவில் முலாயம் சிங் கட்சி அலுவலகத்தில் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறும்போது, “கட்சியும், குடும்பமும் ஒன்றாக உள்ளது. ராம்கோபால் யாதவுக்கு நான் எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. நீக்கிய மந்திரிகளை மீண்டும் சேர்த்துக் கொள்வது பற்றி அகிலேஷ் முடிவு செய்வார். மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். அதில் முழு நம்பிக்கை எனக்கு உண்டு“ என்றார்.

    அவரிடம் சமாஜ்வாடி மீண்டும் ஆட்சி அமைத்தால் அகிலேஷ் யாதவ் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்படுவாரா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த முலாயம் சிங், “இப்போது அகிலேஷ் முதல்-மந்திரியாக இருக்கிறார். அவருக்கு ஏதாவது எதிர்ப்பு இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார். 
    Next Story
    ×