search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யார் கழுத்தை பிடித்தும் ராணுவ நலநிதிக்கு பணம் வாங்க மாட்டோம்: மனோகர் பரிக்கர்
    X

    யார் கழுத்தை பிடித்தும் ராணுவ நலநிதிக்கு பணம் வாங்க மாட்டோம்: மனோகர் பரிக்கர்

    பாகிஸ்தான் நடிகரை வைத்து படம் தயாரித்த நிறுவனம் பிராயசித்த தொகையாக 5 கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவரும் நிலையில் யார் கழுத்தை பிடித்தும் ராணுவ நலநிதிக்கு பணம் வாங்க மாட்டோம் என ராணுவ மந்திரி மனோகர் பரிக்கர் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    கரன் ஜோஹர் இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘ஏ தில் ஹே முஷ்கில்’ இந்திப் படத்தில் பாகிஸ்தான் நடிகரை நடிக்க வைத்ததற்காக அப்படக்குழுவினர் இந்திய ராணுவத்தினர் நலவாழ்வு நிதிக்கு 5 கோடி ரூபாயை ‘பிராயச்சித்த தொகை’யாக அளிக்க வேண்டும் என மகாராஷ்டிரா நவ்நிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரே வலியுறுத்தி இருந்தார்.

    இதுதொடர்பாக, மராட்டிய மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் படத்தின் தயாரிப்பாளரான கரன் ஜோஹர் இடையே சமீபத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    ‘ஏ தில் ஹே முஷ்கில்’ படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு அதிகப்படியான போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய கரண் ஜோஹர் ராணுவ நலநிதிக்கு 5 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்குவதற்கு ஒப்புக்கொண்டதாக சில ஊடகங்களில் தகவல் வெளியானது.

    இந்த செயல் தேசபக்திக்கு விலைவைப்பதாக உள்ளதாக பலதரப்பில் இருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.

    இந்நிலையில், யார் கழுத்தை பிடித்தும் ராணுவ நலநிதிக்கு பணம் வாங்க மாட்டோம் என ராணுவ மந்திரி மனோகர் பரிக்கர் இன்று தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் இன்று நடைபெற்ற கடற்படை தளபதிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட மனோகர் பரிக்கர், ‘போரில் வீரமரணம் அடைந்த ராணுவத்தினரின் குடும்பங்களுக்கான நலநிதிக்கு நன்கொடை அளிப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து, மனவிருப்பத்துடன் நிதியளிக்க வேண்டும்.

    மாறாக, நீங்கள் இவ்வளவு பணம் தரவேண்டும் என யார் கழுத்தை பிடித்தும் வற்புறுத்துவதில்லை’ என கூறினார்.
    Next Story
    ×