search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.25 கோடிக்கு சொத்து குவித்த போக்குவரத்து அதிகாரி: லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
    X

    ரூ.25 கோடிக்கு சொத்து குவித்த போக்குவரத்து அதிகாரி: லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

    7 அடுக்குமாடி குடியிருப்புகள் - பங்களாவுடன் ரூ. 25 கோடிக்கு சொத்து குவித்த போக்குவரத்து அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.
    ஐதராபாத்:

    ஆந்திர மாநில போக்குவரத்து துறையில் அதிகாரியாக பணிபுரிபவர் பூரணசந்திர ராவ். 55 வயதாகும் இவர் 1981-ல் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியை தொடங்கினார். அதன் பிறகு குண்டூர், ஓங்கோல், நெல்லூர் ஆகிய இடங்களில் போக்குவரத்து அதிகாரியாக பணியாற்றினார்.

    இவர் தனது 34 ஆண்டு பணியில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி சேர்த்து இருப்பதாக ஆந்திர மாநில லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் பூர்ண சந்திர ராவின் சொத்து விவரங்களை சேகரித்தனர்.

    அப்போது இவருக்கு ஐதராபாத், விஜயவாடா, வினுகொண்டா, குண்டூர் உள்ளிட்ட பல நகரங்களில் 7 அடுக்கு மாடி குடியிருப்புகளும் ஒரு பங்களாவும் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதையடுத்து நேற்று லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் குண்டூரில் உள்ள அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இங்குதான் பூர்ண சந்திரராவ் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

    அந்த வீட்டின் ஒரு அறை முழுவதும் வெள்ளிப் பாத்திரங்களும், தங்க நகைகளும் குவிந்து கிடந்தது. இதைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மொத்தம் 60 கிலோ வெள்ளியும், 1 கிலோ தங்கமும் இருந்தது. அத்துடன் ரூ.20 லட்சம் ரொக்கப் பணமும் அந்த அறையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. மேலும் ஏராளமான சொத்துக்களுக்கான ஆவணங்களும் சிக்கியது.

    இந்த சொத்துக்களின் மதிப்பு ரூ.3 கோடி என்று குறிப்பிட்டாலும், அதன் சந்தை மதிப்பு ரூ. 25 கோடி இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது சில சொத்துக்களின் மதிப்புதான், இன்னும் நிறைய சொத்துக்களை கண்டு பிடிக்க வேண்டி உள்ளது.

    இதையடுத்து பூர்ண சந்திரராவ் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த சொத்துக்களை அவர் எப்படி சேர்த்தார் என்று அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×