search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி: கைதானவர்களை விடுதலை செய்ய கோரிய மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
    X

    முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி: கைதானவர்களை விடுதலை செய்ய கோரிய மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

    முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
    புதுடெல்லி:

    தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல் நிலை பற்றி முகநூல் (பேஸ்புக்), வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் வதந்தி பரப்பி வருவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இது தொடர்பாக தமிழகம் முழுவதும் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் 40–க்கும் மேற்பட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. தவிர, இதுபோல் வதந்தி கிளப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்து இருக்கின்றனர்.

    இதனிடையே, முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி சமூக சேவகர் டிராபிக் ராமசாமி சார்பில் அவரது வழக்கறிஞர் மணி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.

    இந்தநிலையில், டிராபிக் ராமசாமி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் அமிதவா ராய் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    ஆனால், இந்த மனுவை விசாரிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். இந்த விவகாரத்தில் தலையிட மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், அவதூறு கிரிமினல் குற்றத்தின் அடிப்படையில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்தனர்.

    மேலும், “தற்போதையை மனு அவதூறு வழக்குடன் தொடர்புடையது அல்ல. மாநில அரசின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று மிஸ்ரா தெரிவித்தார்.  

    இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், “மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த விவகாரத்தில் தவறான தகவல் அளித்ததன் அடிப்படையில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால் பிரபலத்திற்காக வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறி நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
    Next Story
    ×