search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்களுக்கும் அனுமதி: சுப்ரீம் கோர்ட்டில் தர்கா நிர்வாகம் ஒப்புதல்
    X

    ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்களுக்கும் அனுமதி: சுப்ரீம் கோர்ட்டில் தர்கா நிர்வாகம் ஒப்புதல்

    மராட்டிய மாநிலத்தில் அமைந்துள்ள ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்களையும் அனுமதிக்க உச்ச நீதிமன்றத்தில் தர்கா நிர்வாகம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
    புதுடெல்லி:

    மராட்டிய மாநில தலைநகரான மும்பையின் தெற்கே வோர்லி கடற்கரை தீவில் அமைந்துள்ள ஹாஜி அலி தர்கா மிகவும் பிரபலமானது. இந்த தர்காவுக்குள் பெண்கள் நுழைவதற்கு அனுமதி இல்லை.

    இந்த நடைமுறையை எதிர்த்து சில பெண்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதனை விசாரித்த நீதிமன்றம், வழிபாட்டு முறையில் பாலினப் பாகுபாடு இருக்கக் கூடாது என்று கூறி, அந்தத் தடையை நீக்க உத்தரவிட்டது.

    அப்போது நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்த தர்கா நிர்வாகம், "இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வரை ஏற்கெனவே உள்ள நடைமுறையையே பின்பற்ற அனுமதிக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக் கொண்டு 6 வாரங்களுக்கு அந்த உத்தரவின்மீது  மும்பை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

    இந்தச் சூழலில் ஹாஜி அலி தர்கா நிர்வாகம், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    தர்கா நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்குறிஞர் கோபால் சுப்பிரமணியன் வாதிடும்போது "இந்த விவகாரத்தில் முற்போக்காக செயல்படவே விரும்புகிறோம்; அனைத்து புனித நூல்களும், மதங்களும் பாலின சமத்துவத்தைத்தான் போதிக்கின்றனவே தவிர அதற்கு எதிரான கருத்துகளைக் கூறவில்லை' என்றார்.

    இந்த விவகாரம் தொடர்பான விசாரணையில் இருதரப்பு வாதங்களும் முழுமையடையும் வரை தர்காவில் பழைய நடைமுறையையே பின்பற்ற அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    இதைத்தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை அக்டோபர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், அதுவரை இடைக்காலத் தடையை நீட்டிப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், இன்றைய விசாரணையின்போது, தர்கா நிர்வாகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ஹாஜி அலி தர்காவுக்குள் இனி பெண்களையும் அனுமதிக்க தர்கா நிர்வாகம் தீர்மானித்துள்ளது’ என தெரிவித்தார்.

    இதையடுத்து, தர்காவுக்குள் பெண்கள் வருவதற்கு வசதியாக தேவையான கட்டமைப்புகளை இன்னும் 4 வாரங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என தர்கா நிர்வாகத்தை சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
    Next Story
    ×