search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலாக் விவகாரத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதா?: பிரதமர் மீது அசாதுதீன் ஒவைசி பாய்ச்சல்
    X

    தலாக் விவகாரத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதா?: பிரதமர் மீது அசாதுதீன் ஒவைசி பாய்ச்சல்

    மூன்றுமுறை ‘தலாக்’ சொல்லி விவாகரத்து பெறும் விவகாரத்தை எதிர்வரும் தேர்தல்களை மனதில்வைத்து அரசியல் ஆயுதமாக பிரதமர் மோடி பயன்படுத்தி வருவதாக அசாதுதீன் ஒவைசி குற்றம்சாட்டியுள்ளார்.
    மும்பை:

    நம் நாட்டில் உள்ள முஸ்லிம் சமுதாயத்தினர் 3 முறை ‘தலாக்’ கூறி மனைவியை விவாகரத்து செய்வது நடைமுறையில் உள்ளது. இது சட்டத்துக்கும், ஜனநாயகத்துக்கும், மனித குலத்துக்கும் எதிரானது. முஸ்லிம் பெண்களில் ஒருதரப்பினர் எதிர்ப்பதால், தலாக் முறையை ரத்து செய்வது குறித்து உச்ச நீதிமன்றம் பரிசீலித்து வருகிறது.

    இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசும் ஆலோசித்துவரும் நிலையில், 3 முறை ‘தலாக்’ கூறி மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறையை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியமும், இதர முஸ்லிம் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில், தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் நேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி இவ்விவகாரம் தொடர்பாக கூறிய கருத்துக்கு அகில இந்திய மஜ்லிஸ்-இ-இட்டெஹாதுல் முஸ்லிமீன் இயக்கத் தலைவரும், ஐதராபாத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்ப்ரா பகுதியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஒவைசி, நாட்டில் சுமார் 7.36 கோடி முஸ்லிம்கள் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருவதாகவும், இவர்களில் ஒரு சதவீதம் பேர்கூட தலாக்கை நாடிப் போகவில்லை என்றும் குறிப்பிட்டார்.

    ஆனால், தனது ‘மன் கி பாத்’ வானொலி உரையில் எதிர்வரும் தேர்தல்களை மனதில் வைத்தும், அரசியல் ஆதாயத்துக்காகவும், இவ்விவகாரத்தை அரசியல் ஆயுதமாக பிரதமர் மோடி பயன்படுத்தி வருவதாகவும் ஒவைசி குற்றம்சாட்டினார்.

    கரன் ஜோஹர் இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘ஏ தில் ஹே முஷ்கில்’ இந்திப் படத்தில் பாகிஸ்தான் நடிகரை நடிக்க வைத்ததற்காக அப்படக்குழுவினர் இந்திய ராணுவத்தினர் நலவாழ்வு நிதிக்கு 5 கோடி ரூபாயை ‘பிராயச்சித்த தொகை’யாக அளிக்க வேண்டும் என மகாராஷ்டிரா நவ்நிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்த கருத்துக்கும் கண்டனம் தெரிவித்துள்ள ஒவைசி, ராஜ் தாக்கரேவின் கருத்து இந்திய ராணுவ வீரர்களை கேலிசெய்யும் விதமாக அமைந்துள்ளது என கூறினார்.
    Next Story
    ×