search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் துப்பாக்கிச்சூடு: ஒரு வீரர் பலி
    X

    ஜம்மு எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் துப்பாக்கிச்சூடு: ஒரு வீரர் பலி

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின்மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திவரும் ஆவேச தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் முகாம்கள் அமைத்து, இந்திய நகரங்களில் தாக்குதல் நடத்த சதிசெய்து கொண்டிருந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் கடந்த மாதம் 28-ந்தேதி நள்ளிரவு அதிரடியாக தாக்குதல் நடத்தியது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்கள் நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 3 நாட்களாக கத்துவா மாவட்டம், ஹிரா நகர் பகுதியில் பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையினர் பீரங்கிகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் தொடர் தாக்குதல் நடத்தி வந்தனர்.

    நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 6 முறை போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

    நமது எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இதற்கு சரியான பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையினர் 7 பேரும், ஒரு தீவிரவாதியும் கொல்லப்பட்டனர்.

    கடந்த வெள்ளிக்கிழமை கத்துவா மாவட்டம் ஹீராநகர் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் படுகாயம் அடைந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் குர்ணம் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இப்படி பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் எல்லையோரத்தில் ஹிரா நகர் பகுதி கிராமங்களில் வாழ்கிற மக்கள் நிம்மதியும், உறக்கமும் இன்றி பதற்றத்தில் தவித்தனர். எந்த நேரம் பாகிஸ்தான் எப்படி தாக்குதல் நடத்துமோ? என தெரியாமல் அவர்கள் கவலைப்பட்டனர்.

    இதனால், எல்லைப்பகுதியில் உள்ள குக்கிராமங்களில் அச்சத்தில் தவித்து வந்த மக்கள் 400 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டு குண்டு துளைக்க முடியாத வாகனங்கள் மூலம் பாதுகாப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    ஹிராநகர் பகுதி கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள், ஹிராநகர் மற்றும் சான் காத்ரியான் பள்ளிகளில் தற்காலிக முகாம்கள் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஜம்மு மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.புரா, பர்க்வால், கனாச்சக் உள்ளிட்ட 13 இடங்களில் உள்ள இந்திய நிலைகளின்மீது நேற்றிரவில் இருந்து பாகிஸ்தான் படைகள் ஆவேச தாக்குதல் நடத்தி வருகின்றன.

    இந்த தாக்குதலில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரரான அரியானா மாநிலத்தை சேர்ந்த சுஷில் குமார் உயிரிழந்ததாகவும், பீகார் மாநிலத்தை சேர்ந்த புரி என்ற வீரர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், பாகிஸ்தான் படைகள் மோர்ட்டார் ரக குண்டுகளை வீசி தாக்கியதால் எல்லைப்பகுதி கிராமத்தை சேர்ந்த இரு பெண்கள் உள்பட 6 பேர் காயம் அடைந்ததாகவும் ஜம்முவில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வீட்டுக்குள் மோர்ட்டார் குண்டு விழுந்ததில் டிரேவா பகுதியை சேர்ந்த கிருஷானா தேவி மற்றும் கஜன்சூ பகுதியை சேர்ந்த பிரகாஷோ தேவி ஆகிய இரு மூதாட்டிகளும் மேலும் 4 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் ஆறு பேரும் ஜம்மு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
    Next Story
    ×