search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருப்பு பண முதலைகள் மீது அதிரடி நடவடிக்கை- ரூ.125 கோடி குவித்த டெல்லி வக்கீல் சிக்கினார்
    X

    கருப்பு பண முதலைகள் மீது அதிரடி நடவடிக்கை- ரூ.125 கோடி குவித்த டெல்லி வக்கீல் சிக்கினார்

    கருப்பு பண முதலைகள் மீது வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கையை தொடங்கி உள்ளது. ரூ.125 கோடி குவித்த டெல்லி வக்கீல் சிக்கினார்.

    புதுடெல்லி:

    கருப்பு பண ஒழிப்பில் நரேந்திர மோடி அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. ஒரு பக்கம் வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை நாட்டுக்கு கொண்டு வந்து சேர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

    இன்னொரு பக்கம், உள்நாட்டில் கருப்பு பண முதலைகள் குவித்துள்ள கருப்பு பணம், சொத்துகள் மீது வருமான வரித்துறை மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், கருப்பு பண முதலைகள் தாமாக முன் வந்து கருப்புபணம், சொத்துக்களை பற்றிய தகவல்களை அளித்து அபராதம் செலுத்துவதற்கு மத்திய அரசு 4 மாத கால அவகாச திட்டம் ஒன்றை அறிவித்தது.

    கடந்த மாதம் 30–ந்தேதியுடன் முடிவுக்கு வந்த இந்த திட்டத்தின் கீழ் ரூ.65 ஆயிரத்து 250 கோடி கருப்பு பணம் கணக்கில் வந்துள்ளது. அந்தப் பணத்தை குவித்தவர்களிடம் இருந்து வரி, அபராதம் என மொத்தம் 45 சதவீத அளவுக்கு வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இந்த திட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தாமாக முன் வந்து கணக்கு காட்டாத கருப்பு பண முதலைகள் மீது வருமான வரித்துறை தனது அதிரடி நடவடிக்கையை தொடங்கி உள்ளது. தாமாக முன்வந்து கணக்கு அளித்தவர்களிலும், முழுமையாக கணக்கு கூறாமல் ‘டிமிக்கி’ கொடுக்க நினைத்து அரை குறை கணக்கு அளித்தவர்களையும் வருமான வரித்துறை விட விரும்பவில்லை.

    கடந்த சில தினங்களுக்கு முன் கொல்கத்தாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ரூ.3 கோடி கருப்பு பண குவிப்புக்கு தாமாக முன் வந்து கணக்கு காட்டி அதற்கான ரசீது பெற்றிருப்பதை வருமான வரித்துறையினரிடம் அந்த நிறுவனத்தினர் காட்டினர். ஆனால் அந்த நிறுவனம் ரூ.30 கோடிக்கு சட்டவிரோதமாக சொத்து குவித்திருப்பதை கணக்கில் கொண்டு வரவில்லை. இதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர்.

    அந்த நிறுவனம் தாமாக முன் வந்து கணக்கு விவரங்கள் அளித்ததிலும் முழுமையாக கணக்கு தராமல் ரூ.30 கோடி சட்டவிரோத சொத்தை மறைத்து விட்டதற்காக, அதன் மீது கடுமையான அபராதம் விதிக்கவும், வழக்கு தொடரவும் வருமான வரித்துறை நடவடிக்கை எடுப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

    இதேபோன்று டெல்லியில் பிரபல வக்கீல் ஒருவருக்கு சொந்தமான கட்டிடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைகள் நடத்தினர். இந்த சோதனைகளின்போது, அந்த வக்கீல் ரூ.125 கோடி அளவுக்கு கருப்பு பணம் குவித்து வைத்திருப்பது குறித்து கணக்கு அளித்தார்.

    அவர் தானாக முன்வந்து கணக்கு அளித்து அபராதம் செலுத்தி, கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றும் வாய்ப்பை பயன்படுத்தாமல் தவற விட்டு, இப்போது மாட்டிக் கொண்டிருக்கிறார்.

    இதேபோன்று கருப்பு பணம் குவித்து ஏமாற்றியுள்ள தனி நபர்கள், நிறுவனங்கள் யாரையும் விட்டு வைக்காமல் வருமான வரித்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

    இதற்கிடையே குஜராத் மாநிலம், வதோதராவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ என்னும் துல்லியமான தாக்குதல் நடவடிக்கை எடுத்ததுபோல, வருமான வரி ஏய்ப்பு செய்கிறவர்கள் மீதும் துல்லியமான நடவடிக்கை பாயும் என சூசகமாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×