search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாட்டுக்கு முழு நேர கவர்னர் ஆகிறார் வித்யாசாகர்
    X

    தமிழ்நாட்டுக்கு முழு நேர கவர்னர் ஆகிறார் வித்யாசாகர்

    தமிழக முழுநேர கவர்னராக வித்யாசாகர் ராவ் நியமிக்கப்படுகிறார்.
    புதுடெல்லி:

    தமிழக கவர்னராக இருந்த கே.ரோசய்யாவின் 5 ஆண்டு பதவி காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவர் ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக புதிய கவர்னராக யாரை நியமிக்கலாம் என்று மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தியது.

    கர்நாடகத்தை சேர்ந்த சந்தரமூர்த்தி என்பவரை தமிழக கவர்னராக நியமிக்கலாம் என்று மத்திய அரசு முடிவு செய்தது. தமிழக, கர்நாடகம் இடையே காவிரி நீர் பிரச்சினை நிலவுவதால் அவரை தமிழக கவர்னராக நியமிப்பது சரியாக இருக்காது என்பதால் அந்த முடிவு கைவிடப்பட்டது.

    இதில் தாமதம் ஏற்பட்டதால் தற்காலிக ஏற்பாடாக மராட்டிய மாநில கவர்னராக இருக்கும் வித்யாசாகர் ராவ் தமிழக கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அவர் தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழக விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அவரது ஏற்பாட்டின் பேரில் முதல்-அமைச்சர் கவனித்து வந்த இலாகாக்கள் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனித்து வருகிறார்.

    முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு தமிழகத்துக்கு இப்போது முழு நேர கவர்னர் அவசியம் என்பதை மத்திய அரசு உணர்ந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு வித்யாசாகர் ராவையே முழு நேர கவர்னராக நியமிக்கலாமா என்று ஆலோசனை நடத்தி வருகிறது.

    கர்நாடகத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தியை மராட்டிய கவர்னராக நியமித்து வித்யாசாகர் ராவை தமிழகத்துக்கு நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தெலுங்கானா கவர்னராக இருக்கும் நரசிம்மன் தெலுங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களையும் சேர்த்து கவனித்து வருகிறார். இந்த இரு மாநிலங்களுக்கும் தனித்தனி கவர்னர்கள் நியமிக்கப்படுகிறார்கள். நரசிம்மன் தெலுங்கானா கவர்னராகவும், கேரள கவர்னராக இருக்கும் சதா சிவத்தை ஆந்திர கவர்னராக நியமிக்கவும் ஆலோசனை நடந்து வருகிறது.

    கேரளாவுக்கு புதிய கவர்னராக குஜராத் முன்னாள் முதல்-மந்திரி ஆனந்தி பென்பட்டேலை நியமிக்கலாமா? என்று மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.
    Next Story
    ×