search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏலம்கேட்க ஆளில்லாமல் போன விஜய் மல்லையாவின் கோவா சொகுசு பங்களா
    X

    ஏலம்கேட்க ஆளில்லாமல் போன விஜய் மல்லையாவின் கோவா சொகுசு பங்களா

    பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கோவா சொகுசு பங்களாவை ஏலம்விடும் முயற்சியும் சொதப்பலில் முடிந்துள்ளது.
    புதுடெல்லி:

    விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் , கனரா வங்கி, பரோடா வங்கி உள்ளிட்ட வங்கிகள் 9 ஆயிரம் கோடி ரூபாய்வரை கடன் அளித்திருந்தன.

    ஆனால், கிங் ஃபிஷர் நிறுவனம் தொடர்ந்து கடுமையான நஷ்டத்தை சந்தித்தது. விஜய் மல்லையாவின் நிர்வாக கோளாறுகளே இதற்கு காரணம் என்றும் கூறப்பட்டது.

    கடந்த ஆண்டு பாரத ஸ்டேட் வங்கி, விஜய் மல்லையாவை 'வேண்டுமென்றே தவறிழைத்தவர்' என்று அறிவித்தது. அதேபோல் யுனைடெட் புருவரீஸ் ஹோல்டிங் நிறுவனமும், அதன் தலைவருமான விஜய் மல்லையாவும், செயல்படாத கிங்ஃபிஷர் நிறுவனமும் 'வேண்டுமென்றே தவறிழைத்தவர்' பட்டியலில் சேர்க்கப்படுவதாக பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்திருந்தது.

    இதற்கிடையில், வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு சென்றுவிட்ட விஜய் மல்லையாவின் கோவா சொகுசு மாளிகையை ஏலத்தில்விட ஸ்டேட் பாங்க் குழுமம் கடந்த மாதம் தீர்மானித்தது.

    சுமார் 12,350 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த ஆடம்பர பங்களாவுக்கான குறைந்தபட்ச ஏலத்தொகையாக 85 கோடியே 30 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது.



    வடக்கு கோவாவில் உள்ள கன்டோலிம் பகுதியில் சுமார் 12,350 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த பங்களாவை கடந்த செப்டம்பர் மாதம் 26-27 தேதிகளிலும், அக்டோபர் 5-6 தேதிகளிலும் பார்வையிடலாம் என விஜய் மல்லையாவுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை கடனாக அளித்துள்ள ஸ்டேட் பாங்க் நிறுவனத்தின் சார்பில் இந்த ஏலத்தை நடத்தும் உரிமையை பெற்றுள்ள நிறுவனம் அறிவித்தது.

    இந்த சொகுசு பங்களாவை முன்னர் விஜய் மல்லையா பல பிரபலங்களுக்கு ‘பார்ட்டி’ கொடுக்கும் இடமாக பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த பங்களா கடந்த 19-ம் தேதி ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஏலத்தில் எடுக்க யாருமே முன்வரவில்லை. குறைந்தபட்ச ஏலத்தொகையான 85 கோடியே 30 லட்சம் ரூபாய் என்பது மிகவும் அதிகமான தொகையாக இருப்பதால் யாரும் ஏலம் கேட்கவில்லை என கூறப்படுகிறது.

    இதற்கு முன்னர் மும்பையில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துகள், அவரது வர்த்தக முத்திரைகள் போன்றவை ஏலம் விடப்பட்டபோதும் குறைந்தபட்ச ஏலத்தொகை மிக அதிகமாக இருந்ததால் அந்த முயற்சிகள் எல்லாம் பலனற்று போனது, குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையில், முறைகேடான நிதிபரிவர்த்தனை தொடர்பான வழக்கில் வரும் 24-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று விஜய் மல்லையாவுக்கு கர்நாடகா ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    Next Story
    ×