search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அழகிகளுக்காக ராணுவ ரகசியத்தை விற்றேனா?: நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் - வருண் காந்தி ஆவேசம்
    X

    அழகிகளுக்காக ராணுவ ரகசியத்தை விற்றேனா?: நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் - வருண் காந்தி ஆவேசம்

    வெளிநாட்டு அழகிகளுக்காக ராணுவ ரகசியத்தை வருண் காந்தி வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதில் உண்மை இருந்தால் அரசியலுக்கு முழுக்கு போடுகிறேன் என அவர் ஆவேசமாக மறுத்தார்.
    புதுடெல்லி:

    சர்ச்சைக்குரிய ஆயுத தரகர் அபிஷேக் வர்மாவின் தொழில் கூட்டாளியாக செயல்பட்டு வந்தவர், அமெரிக்க வக்கீல் எட்மண்ட்ஸ் ஆலன்.

    இவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 25-ந் தேதியும், செப்டம்பர் 16-ந் தேதியும் 2 கடிதங்கள் எழுதி உள்ளார்.

    அதில் அவர், ‘மத்திய மந்திரி மேனகா காந்தியின் மகனும், பா.ஜனதா கட்சி எம்.பி.யுமான வருண் காந்தியுடன், வெளிநாட்டு அழகிகளையும், விபசார அழகிகளையும் அபிஷேக் வர்மா நெருங்கி பழக விட்டார். அதை அவர் ரகசியமாக படம் பிடித்தார். அந்த படங்களை காட்டி, வருண் காந்தியை மிரட்டி, பாதுகாப்பு துறைக்கான பாராளுமன்ற குழுவின் உறுப்பினர் என்ற முறையில், அவரிடம் இருந்து ராணுவ ரகசியங்களை கறந்தார்’ என குற்றம் சாட்டி உள்ளார்.

    இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக சில புகைப்படங்களையும், சி.டி.களையும் அவர் அனுப்பியும் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த எட்மண்ட்ஸ் ஆலன், 2005-ம் ஆண்டு பெரும்பரபரப்பை ஏற்படுத்திய ‘வார்ரூம் லீக்’ (போர் அறையில் இருந்து முக்கிய ரகசியங்கள் வெளியீடு) விவகாரத்தில், அபிஷேக் வர்மாவுக்கு எதிராக சி.பி.ஐ. உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளுக்கு பல்லாண்டு காலமாக ஆவணங்களை அளித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக ‘சுவராஜ் அபியான்’ அமைப்பின் தலைவர்கள் பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகிய இருவரும் டெல்லியில் நேற்று நிருபர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள், வருண் காந்தி மீதான வக்கீல் எட்மண்ட் ஆலனின் புகார் ஆவணங்களை வெளியிட்டனர். அப்போது அவர்கள், “தேசிய பாதுகாப்பு நலன்களில் காங்கிரசும் சரி, பாரதீய ஜனதாவும் சரி ஒன்றுக்கொன்று ரகசியமாக ஒத்துழைத்து இருக்கிறார்கள், பாதுகாத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுவதுதான் எங்கள் நோக்கம்” என குறிப்பிட்டனர்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை வருண் காந்தி திட்டவட்டமாக மறுத்தார். இதுபற்றி அவர் கூறுகையில், “என் மீதான குற்றச்சாட்டுகள், முற்றிலும் அபத்தமானவை. இவற்றில் 1 சதவீதம் உண்மை இருந்தாலும், அரசியலுக்கு முழுக்கு போட்டு விடுகிறேன். நாட்டின் பாதுகாப்பு குறித்த தகவல்களை நான் எப்படி பெற்றேன் என்றோ, அவற்றை அபிஷேக் வர்மாவுடன் பகிர்ந்துகொண்டேன் என்பதற்கோ சிறிதளவு கூட ஆதாரம் இல்லை” என ஆவேசத்துடன் குறிப்பிட்டார்.

    மேலும், “பாதுகாப்பு துறைக்கான குழுவைப்பற்றி அறிந்தவர்கள், அந்த குழுவுடன் ராணுவ ரகசியங்களோ, ரகசிய தகவல்களோ, பகிர்ந்துகொள்ளப்படுவதில்லை என்று அறிவார்கள். அபிஷேக் வர்மாவின் பெற்றோர், டெல்லி மேல்-சபை உறுப்பினர்களாக இருந்தவர்கள். நான் 22 வயதாக இருந்தபோது அவரை சந்தித்திருக்கிறேன். அப்போது நான் பொது வாழ்க்கைக்கு வரவில்லை. அதற்கு பின்னர் நான் அவரை ஒருபோதும் சந்தித்தது இல்லை” எனவும் கூறினார்.

    அபிஷேக் வர்மாவும் வக்கீல் எட்மண்ட்ஸ் ஆலன் புகார்களை மறுத்துள்ளார். இதுபற்றி அவர், “எட்மண்ட்ஸ் ஆலன் மிரட்டல் விடுப்பவர். அவர் படங்களை போலியாக சித்தரித்திருக்கிறார்” என்று கூறி உள்ளார்.

    Next Story
    ×