search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்டில் நான் ஆஜராக முடியுமா?: அரசியல் சாசனத்தை சுட்டிக்காட்டி முன்னாள் நீதிபதி கட்ஜூ கேள்வி
    X

    சுப்ரீம் கோர்ட்டில் நான் ஆஜராக முடியுமா?: அரசியல் சாசனத்தை சுட்டிக்காட்டி முன்னாள் நீதிபதி கட்ஜூ கேள்வி

    சுப்ரீம் கோர்ட்டில் நான் ஆஜராக முடியுமா என்று அரசியல் சாசனத்தை சுட்டிக்காட்டி முன்னாள் நீதிபதி கட்ஜூ கேள்வி எழுப்பி உள்ளார்.
    புதுடெல்லி:

    கேரளாவில் ஓடும் ரெயிலில் இருந்து சவுமியா என்ற பெண் தள்ளிவிடப்பட்டு, கற்பழிக்கப்பட்டு, மரணம் அடைந்தார். 2011-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம், நாட்டையே உலுக்கியது. இதில் குற்றம்சாட்டப்பட்ட கோவிந்தசாமிக்கு விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அதை ஐகோர்ட்டு உறுதி செய்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு, கோவிந்தசாமிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.

    இதை சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ விமர்சித்து ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டார்.

    அதில் அவர், “குற்றவாளியை கொலைக்குற்றச்சாட்டின்படி குற்றவாளி என தீர்க்காமல், கோர்ட்டு மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. இந்த தீர்ப்பு திறந்த நீதிமன்றத்தில் மறுஆய்வு செய்யப்படவேண்டியது அவசியம்” என கூறினார்.

    இதை அறிந்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், யு.வி. லலித் ஆகியோர் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து நேரில் விளக்கம் அளிக்க கட்ஜூவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து கட்ஜூ ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில், “நான் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி, திறந்த நீதிமன்றத்தில் விவாதிப்பதில் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதியான நான் நேரில் ஆஜர் ஆவதில் இருந்து அரசியல் சாசனம் பிரிவு 124 (7) தடை விதித்திருக்கிறதே, இதை நீதிபதிகள் பரிசீலித்தார்களா என அறிய விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×