search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீகாரில் மதுவிலக்கு சட்டத்துக்கு தடை: பாட்னா ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு
    X

    பீகாரில் மதுவிலக்கு சட்டத்துக்கு தடை: பாட்னா ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

    பீகார் மாநிலத்தில் மது விலக்கு தொடர்பாக கொண்டுவரப்பட்ட சட்டத்திற்கு தடை விதித்து பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் நிதிஷ்குமார் சட்டசபை தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார். அதன்படி பதவி ஏற்றதும் ஏப்ரல் மாதம் முதல் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. மது விற்பனை மற்றும் மது அருந்துவதை தடை செய்யும் கடுமையான இந்த சட்டம் அமலுக்கு வந்ததையடுத்து மது விற்பனை மற்றும் மது கடத்தலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்யப்படும் கள்ளச்சாராயத்தினால் பலர் உயிரிழந்தனர். இதுபற்றி முதலமைச்சரிடம் கேட்டபோது, மதுவிலக்கு அமலில் இல்லாத மாநிலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக கூறியதுடன், பீகாரில் மதுவிலக்கு தோல்வியடைந்ததால் ஏற்பட்ட சம்பவம் என்று கூறுவதை ஏற்க முடியாது என்றார்.

    மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதால் அரசுக்கு 5000 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் 10 ஆயிரம் கோடி மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என்ற கருத்தினையும் அவர் முன்வைத்தார்.

    இதற்கிடையே பீகார் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கடுமையான மதுவிலக்கு சட்டத்தை நீக்கக்கோரி பாட்னா உயர்நீதிமன்றத்தில் மது விற்பனை சங்கம் மற்றும் தனிநபர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை தலைமை நீதிபதி இக்பால் அகமது அன்சாரி, நீதிபதி நபநிதிபிரசாத் சிங் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. விசாரணை மே 20-ம் தேதி முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், தலைமை நீதிபதி இக்பால் அகமது அன்சாரி, நீதிபதி நபநிதிபிரசாத் சிங் ஆகியோர் இன்று தீர்ப்பினை வாசித்தனர். அப்போது மது அருந்துதல் மற்றும் விற்பனையை தடை செய்வது தொடர்பாக ஏப்ரல் 5-ம் தேதி கொண்டு வரப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் பூரண மது விலக்கு சட்டம் சட்டவிரோதம் என்றும், இதனை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பு நிதிஷ்குமார் அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதப்படுகிறது.
    Next Story
    ×