search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினை: தமிழக, கர்நாடக அரசுகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை
    X

    காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினை: தமிழக, கர்நாடக அரசுகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை

    காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினை குறித்து தமிழக, கர்நாடக மாநில அரசுகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது. இதில் பங்கேற்க அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழு டெல்லி விரைந்தது.
    புதுடெல்லி:

    தமிழகத்தில் சம்பா சாகுபடிக்கு போதுமான தண்ணீரை திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்துக்கு காவிரியில் 21-ந் தேதியில் இருந்து 27-ந் தேதி வரை வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது.

    ஆனால், இந்த உத்தரவை அடுத்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதிக்கு பிறகு நடைமுறைப்படுத்தும்படி உத்தரவிடுமாறு கேட்டு கர்நாடக அரசு திருத்த மனு தாக்கல் செய்தது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து இடைக்கால மனு தாக்கல் செய்தது. அதில், ‘கடந்த 5, 12, 20-ந் தேதிகளில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு எதையும் கர்நாடகம் நடைமுறைப்படுத்தவில்லை. இது கோர்ட்டை அவமதிக்கும் செயல். எனவே, காவிரி நீர் பங்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றும் வரையில் கர்நாடகத்தின் எந்த திருத்தம் கோரும் மனுவையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது’ என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனுக்கள் மீதான விசாரணை, நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது.

    இந்த விசாரணையின்போது, காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினையில், கூட்டாட்சி தத்துவத்தை மதித்து தமிழகம் மற்றும் கர்நாடக மாநில அரசுகளை மத்திய அரசு அழைத்துப்பேச வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அதைத் தொடர்ந்து தமிழக, கர்நாடக அரசுகளின் கூட்டத்தை கூட்டி, மத்திய அரசு ஆலோசனை நடத்த முடிவு செய்தது. அதன்படி, மத்திய நீர்வளத்துறை மந்திரி உமா பாரதி, தலைமையில் இந்த கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 11.30 மணிக்கு டெல்லியில் நடக்கிறது.

    இது தொடர்பாக, சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று முன்தினம் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து டெல்லியில் மத்திய நீர்வளத்துறை மந்திரி உமா பாரதி கூட்டியுள்ள கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர் ராம மோகனராவ், பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே. பிரபாகர், காவிரி தொழில் நுட்ப பிரிவு தலைவர் ஆர்.சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்குமாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உரையை அவர் சார்பில் தலைமைச்செயலாளர் ராம மோகனராவ் வாசிக்க உள்ளார். இதற்காக அவர்கள் அனைவரும் நேற்று இரவு டெல்லி விரைந்தனர்.

    கர்நாடகத்தின் சார்பில் முதல்-மந்திரி சித்தராமையா, நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி. பட்டீல், தலைமைச்செயலாளர் அரவிந்த் ஜாதவ் உள்ளிட்ட 5 உறுப்பினர்கள் குழு பங்கேற்கிறது.

    இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு, நாளை (30-ந் தேதி) சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்படும்.
    Next Story
    ×