search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எதிர்கட்சி தலைவர் ரமேஷ்சென்னிதலா தலைமையில் காங்கிரசார் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய காட்சி.
    X
    எதிர்கட்சி தலைவர் ரமேஷ்சென்னிதலா தலைமையில் காங்கிரசார் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய காட்சி.

    திருவனந்தபுரத்தில் இன்று கடைஅடைப்பு: தமிழக பஸ்கள் களியக்காவிளையில் நிறுத்தம்

    காங். தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து திருவனந்தபுரத்தில் இன்று கடைஅடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டது. ஆளும் கம்யூனிஸ்டு அரசின் மறைமுக ஆதரவுடன்தான் இந்த கல்வி கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்று எதிர்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் குரியா கோஸ் தலைமையில் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசு தலைமைச் செயலகம் முன்பு கடந்த 8 நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

    உண்ணாவிரதம், மறியல், ஆர்ப்பாட்டம் என்று தினம் ஒரு போராட்டம் நடந்து வருகிறது. இதற்கு மாணவர்கள் அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து உள்ளதால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்களும் நடைபெற்றது.

    நேற்று நடந்த போராட்டத்தின் போது இளைஞர் காங்கிரசாரின் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடும்படி போலீசார் கூறினார்கள். அதை அவர்கள் ஏற்க மறுத்து போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். போலீசார் மீது கற்களும் வீசப்பட்டது. இதில் 4 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.

    இதனால் போலீசார் தடியடி, கண்ணீர்புகை வீச்சில் ஈடுபட்டனர். இதில் 28 இளைஞர் காங்கிரசார் காயம் அடைந்தனர். அந்த பகுதியே போர்களம்போல காட்சியளித்தது. போலீஸ் தடியடி பற்றி தகவல் கிடைத்ததும் கேரள எதிர்கட்சி தலைவர் ரமேஷ்சென்னிதலா தலைமையில் காங்கிரசார் சாலையில் அமர்ந்து போராட்டமும் நடத்தினார்கள்.

    போலீசாரின் தடியடிக்கு கண்டனம் தெரிவித்து இன்று திருவனந்தபுரம் மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து இன்று திருவனந்தபுரத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது.

    அதேசமயம் பஸ்கள் ஆட்டோ போன்ற வாகனங்கள் வழக்கம்போல இயங்கின. கடையடைப்பு போராட்டத்தையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் இருந்து களியக்காவிளை வழியாக கேரளாவுக்கு 40 பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் இன்று களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டது. அதேபோல கேரள பஸ்களும் தமிழகத்திற்கு வரவில்லை.

    இதற்கிடையில் உண்ணா விரதம் இருந்த இளைஞர் காங்கிரஸ் தலைவர் குரியாகோஸ் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் மேலும் சில நிர்வாகிகளும் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இளைஞர் காங்கிரசார் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது தனியாருக்கு ஆதரவாக கம்யூனிஸ்டு ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் ரவுடிகளுக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது. போலீசாரை ஏவி காங்கிரசாரை தாக்கியது வண்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.
    Next Story
    ×