search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐதராபாத்தில் ஆக்கிரமித்து கட்டிய 150 வீடுகள் இடிப்பு
    X

    ஐதராபாத்தில் ஆக்கிரமித்து கட்டிய 150 வீடுகள் இடிப்பு

    ஐதராபாத்தில் மழை குறைந்தாலும் வெள்ளம் வடியாமல் இருப்பதால் ஏரிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 150 வீடுகள் இடிக்கப்பட்டன
    நகரி:

    தெலுங்கானா மாநிலத்தில் பலத்த மழையால் பல மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டு வீடுகளில் தண்ணீர் புகுந்தது. குறிப்பாக ஐதராபாத் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏரிகள் நிரம்பியதால் நகருக்குள் வெள்ளம் புகுந்து வீடுகளை மூழ்கடித்தது. மக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.

    இதையடுத்து மீட்பு பணிக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டது. ஐதராபாத்தில் மழை குறைந்தாலும் வெள்ளம் வடியாமல் அப்படியே இருக்கிறது. இதற்கு சரியான வடிகால்வாய்கள் இல்லாததும், ஏரிகளில் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருப்பதும் காரணம்.

    இதையடுத்து நகருக்குள் புகுந்த வெள்ளத்தை வெளியேற்ற ஐதராபாத் மாநகராட்சி அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. ஏரிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிக்க மேயர் ராம்மோகன் உத்தரவிட்டார். இதனால் ஆக்கிரமித்த வீடுகளை ஊழியர்கள் இடித்து தள்ளினார்கள்.

    இதுவரை 150 வீடுகள் இடிக்கப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளை இடிப்பதற்கு பல இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

    பணக்காரர்களின் வீடுகளை இடிக்காமல் ஏழைகளின் வீடுகளை மட்டும் இடிப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.

    இது தொடர்பாக மேயர் ராம்மோகன் கூறுகையில், ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு பணி தொடர்ந்து நடைபெறும். யார் வீடாக இருந்தாலும் இடிக்கப்படும். மீண்டும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சென்னை நகரம் சிக்கியதை எண்ணி பாருங்கள் அது போன்ற நிலை ஐதராபாத்துக்கு வர கூடாது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.
    Next Story
    ×