search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரில் மீண்டும் வன்முறை: 2 இளைஞர்கள் உயிரிழப்பு- பலி 77 ஆக உயர்வு
    X

    காஷ்மீரில் மீண்டும் வன்முறை: 2 இளைஞர்கள் உயிரிழப்பு- பலி 77 ஆக உயர்வு

    காஷ்மீரில் பாதுகாப்பு படையினர்- போராட்டக்காரர்கள் இடையே மீண்டும் ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 9-ம் தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க கமாண்டர் பர்கான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து மாநிலத்தில் அமைதியின்மை நீடித்தது. புர்கான் வானிக்கு ஆதரவாக போராடும் போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக கல்வீச்சு தாக்குதல்கள் நடப்பதால் பாதுகாப்பு படையினர் பெல்லட் குண்டு தாக்குதல் நடத்தியும், தடியடி நடத்தியும் வன்முறையை ஒடுக்கி வருகின்றனர்.

    வன்முறை சற்று குறைந்து ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நிலையில், இன்று அனந்த்நாக்கில் சுதந்திர ஆதரவு முழக்கங்களுடன் ஏராளமானோர் பேரணியாக சென்றனர். பாதுகாப்பு படையினர் தடுக்க முயன்றபோது அவர்கள் மீது கல்வீசி போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினார்கள். அப்போது அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் பெல்லட் குண்டுகள், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் கலைத்தனர். இதில், யாவர் அகமது என்ற இளைஞர் பெல்லட் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

    இதேபோல் தங்வான் துக்ரூ பகுதியில் போரட்டம் நடத்தியவர்கள் மீதும் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர். தடியடியும் நடத்தினர். இதில், சயர் அகமது ஷேக் என்பவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இரண்டு சம்பவங்களிலும் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதவிர மேலும் சில இடங்களில் மோதல் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதன் முலம் காஷ்மீர் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது.
    Next Story
    ×