search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா குடும்பத்தினரால் அதிகாரம் பெற்றவர்கள் அவருக்கு எதிராக பேசுகின்றனர்: மேலூர் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத்
    X

    சசிகலா குடும்பத்தினரால் அதிகாரம் பெற்றவர்கள் அவருக்கு எதிராக பேசுகின்றனர்: மேலூர் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத்

    சசிகலா குடும்பத்தினரால் அதிகாரம் பெற்றவர்கள் அனைவரும் அவருக்கு எதிராக பேசிவருகின்றனர் என மேலூர் பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார்.
    மதுரை:

    ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அ.தி.மு.க. இரு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டது. இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, அ.தி.மு.க அம்மா அணியிலும் பிளவு ஏற்பட்டது. கட்சி நிர்வாகிகளை நியமிக்க தினகரனுக்கு அதிகாரம் இல்லை என்று எடப்பாடி அணியினர் தீர்மானம் நிறைவேற்றினர். இதனால் அணிகள் இணைப்பு முயற்சியில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது.

    இதற்கிடையே, அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அ.தி.மு.க. தொண்டர்களை சந்தித்து ஆதரவு திரட்டும் வகையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய டி.டி.வி.தினகரன் முடிவு செய்தார். முதற்கட்டமாக, மதுரை மாவட்டம் மேலூரில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தார். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் எம்.எல்.ஏ. சாமி மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் செய்தனர்.

    மேலூர்-அழகர்கோவில் ரோட்டில் ஏற்பாடு செய்த இந்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தினகரன் பங்கேற்கும் மேலூர் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

    இதையடுத்து இன்று பலத்த பாதுகாப்புடன் மேலூரில் பொதுக்கூட்டம் தொடங்கியது. இதில், தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பங்கேற்றுள்ளனர். பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு தினகரனுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

    இந்நிலையில், பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசுகையில், “சசிகலா குடும்பத்தினரால் அதிகாரம் பெற்றவர்கள் அனைவரும் அவருக்கு எதிராக பேசி வருகின்றனர். அ.தி.மு.க.வில் தினகரன் தலைமையை அனைவரும் ஏற்க செய்ய வேண்டும்’’ என கூறினார்.

    இதைதொடர்ந்து, பொதுக்கூட்ட மேடைக்கு வந்த டி.டி.வி. தினகரன், அங்கு வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த கூட்டத்தில் தினகரனுக்கு ஆதரவு அளிக்கும் 13 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×