search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மே மாதம் முதல் ரூபே விவசாய கடன் அட்டை வழங்க நடவடிக்கை
    X

    மே மாதம் முதல் ரூபே விவசாய கடன் அட்டை வழங்க நடவடிக்கை

    தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் பெறும் விவசாயிகளுக்கு மே மாதம் முதல் ரூபே விவசாய கடன் அட்டை வழங்கப்படுகிறது.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூட்ட அரங்கில், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர்களுடனான ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவினால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் கூட்டுறவுத்துறை வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    நடப்பாண்டில் (2017-18) கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக ரூ.7 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 180 தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் பண்ணை சாராக் கடன் திட்டத்தின் கீழ் பல்வேறு நோக்கங்களுக்காக கடன் உதவி பெற்று திருப்பிச் செலுத்த இயலாமல் 31.3.14 அன்று தவணை தவறிய 5 ஆயிரத்து 453 கடன்தாரர்கள் பயன்பெறும் வகையில் அரசால் ஒரு முறை கடன் தீர்வு திட்டம் 2014-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. பின்னர், 31.3.17 வரை நீட்டித்து ஆணை வழங்கப்பட்டது.

    இதுவரை 2 ஆயிரத்து 425 விவசாயிகள் ரூ.52.21 கோடி கடன் தொகையை முழுமையாகத் திரும்ப செலுத்தி ரூ.10.29 கோடி வட்டி தள்ளுபடியாக பெற்று பயன் அடைந்துள்ளனர். இதுவரை இத்திட்டத்தை பயன்படுத்திடாத உறுப்பினர்களுக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம் வழங்கும் வகையில் இத்திட்டம் 30.9.17 வரை நீட்டிக்கப்பட உள்ளது.

    பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் பொருட்டும், பயிர்க்கடன் தொகையிலிருந்து விவசாயிகள் செலவிடும் சாகுபடி செலவினங்களை பணமில்லா பரிவர்த்தனைகள் மூலம் செலவிடுவதை ஊக்குவிக்கும் பொருட்டும் இந்திய அரசு ரூபே விவசாயக் கடன் அட்டை திட்டத்தை செயல்படுத்துமாறு தெரிவித்துள்ளது.

    அதனடிப்படையில், தமிழ்நாட்டில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிர்க் கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூபே விவசாயக் கடன் அட்டை மே மாதம் வழங்கப்பட உள்ளது. ரூபே விவசாயக் கடன் அட்டையைக் கொண்டு இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம்.களிலும் பரிவர்த்தனை செய்து கொள்ள அரசு வழிவகுத்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.


    புதிய ரேஷன் அட்டை பெற விண்ணப்பிக்க, முகவரி மாற்றம் செய்ய, புதிய பெயர் சேர்க்க, நீக்க, மொபைல் எண் மாற்றம் செய்ய www.tnpds.com என்ற இணையதளத்தின் மூலம் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், நியாயவிலைக் கடையில் என்னென்ன பொருட்கள் உள்ளன, கடையில், எவ்வளவு இருப்பு உள்ளது, நுகர்வோர்கள் வாங்கிய பொருட்களின் விவரம், கடை திறந்துள்ளதா இல்லையா என அறிதல், வாங்காத பொருட்களுக்கு எஸ்.எம்.எஸ். வருதல் போன்ற குறைகளை களைய 1967 மற்றும் 18004255901 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி மூலம் புகார் தெரிவிக்கலாம்.

    கூட்டுறவு நிறுவனங்களில் அனைத்து நிலைகளிலும் உள்ள காலிப் பணியிடங்கள் இன சுழற்சி முறையில் உரிய வழிமுறைகளைப் முறையாக பின்பற்றி விரைவில் நிரப்பப்படும். இந்தக் கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ, திருவாரூர், திருவள்ளூர், அரியலூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மண்டல இணைப் பதிவாளர்களின் அலுவலக பயன்பாட்டிற்கு ரூ.23.13 லட்சம் மதிப்பில் 4 வாகனங்களை வழங்கினார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×