search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய ஆதாரங்களை திரட்ட தினகரன் இன்று சென்னை அழைத்து வரப்படுகிறார்
    X

    புதிய ஆதாரங்களை திரட்ட தினகரன் இன்று சென்னை அழைத்து வரப்படுகிறார்

    புதிய ஆதாரங்களை திரட்ட டி.டி.வி. தினகரன் இன்று சென்னை அழைத்து வரப்படுகிறார். சென்னையில் சில இடங்களுக்கு அவரை அழைத்து சென்று விசாரிக்க டெல்லி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
    சென்னை:

    தலைமை தேர்தல் கமி‌ஷனரால் முடக்கி வைக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னத்தைப் பெற அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



    இதற்காக விசாரணைக்கு அழைக்கப்பட்ட டி.டி.வி. தினகரனிடம் கடந்த சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது டி.டி.வி.தினகரன் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயற்சி செய்தது உறுதிப்படுத்தப்பட்டது.

    பெங்களூரைச் சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் அவர் நடத்திய ரூ. 50 கோடி பேரத்துக்கான தொலைபேசி உரையாடல் ஆதாரத்தை டெல்லி போலீசார் கையில் வைத்துள்ளனர். தினகரனின் பெங்களூர் நண்பர் மல்லிகார்ஜுனாவுக்கு ஏற்கனவே தரகர் சுகேஷ் அறிமுகம் ஆனவராக இருந்துள்ளார்.

    சுகேஷ் நினைத்தால் இரட்டை இலை சின்னத்தை பெற்றுக் கொடுக்க முடியும் என்று வக்கீல் குமாரிடம், மல்லிகார்ஜுனா கூறியிருக்கிறார். உடனே வக்கீல் குமார் இதுபற்றி டி.டி.வி.தினகரனிடம் தெரிவிக்க, அதன் பிறகு தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் பல தடவை பேசியுள்ளார்.

    அப்போது ரூ. 50 கோடி லஞ்சம் கொடுக்க முடிவு செய்யப்பட்டு முதல் தவணையாக ரூ.10 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் டெல்லி போலீசார் ஆதாரங்களுடன் கண்டுபிடித்தனர்.

    முதலில் டி.டி.வி.தினகரன் இவை அனைத்தையும் மறுத்தார். இதையடுத்து டெல்லி போலீசார், அவரும் சுகேசும் போனில் பேசிய பதிவுகளை ஓட விட்டனர். இது தவிர “வாட்ஸ்-அப்” மூலம் இருவரும் பரிமாறிக் கொண்ட தகவல்களையும் காட்டினார்கள்.

    அதன் பிறகே தினகரன் உண்மையை ஒத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து செவ்வாய்க் கிழமை நள்ளிரவு அவர் கைது செய்யப்பட்டார். நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் அனுமதித்துள்ளார்.

    டி.டி.வி.தினகரனுடன் கைது செய்யப்பட்ட அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவையும் போலீசார் 5 நாள் காவலில் எடுத்துள்ளனர். அவர்கள் இருவரிடமும் அடுத்தக்கட்ட விசாரணையை தொடங்குவதற்கு டெல்லி போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். அதாவது கூடுதல் ஆதாரங்களை கைப்பற்ற வேண்டும். அதோடு இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று டெல்லி குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக உள்ளனர்.

    இதற்காக டி.டி.வி.தினகரன், மல்லிகார்ஜுனா இருவரையும் சென்னை, பெங்களூர், கொச்சி ஆகிய இடங்களுக்கு அழைத்து சென்று விசாரிக்க டெல்லி போலீசார் கோர்ட்டில் அனுமதி வாங்கியுள்ளனர். இடைத்தரகர் சுகேஷ் ஏற்கனவே சென்னை, கொச்சி நகரங்களுக்கு அழைத்து செல்லப்பட்டான்.

    அவன் கொடுத்த வாக்குமூலத்தின் காரணமாகவே தற்போது தினகரன், மல்லிகார்ஜுனா இருவரும் சென்னை, கொச்சி, பெங்களூருக்கு அழைத்து செல்லப்பட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

    இன்று (வியாழக்கிழமை) காலை டெல்லி போலீசார், பலத்த பாதுகாப்புடன் டி. டி.வி.தினகரனை விமான நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பிறகு அங்கிருந்து விமானம் மூலம் டி.டி.வி. தினகரன் சென்னை கொண்டு வரப்படுகிறார். சென்னையில் சில இடங்களுக்கு தினகரனை அழைத்து சென்று விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    பெசன்ட் நகரில் உள்ள டி.டி.வி.தினகரன் வீட்டில் சோதனை நடத்தவும் டெல்லி போலீசார் நேற்று உரிய அனுமதி பெற்றனர். அதன்படி இன்று தினகரன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட உள்ளது. ரூ. 50 கோடி லஞ்சம் கொடுக்க முயற்சி செய்தது தொடர்பான ஆவணங்கள் அல்லது ஆதாரங்களை கைப்பற்றவே இந்த சோதனை நடத்தப்படுகிறது.



    ரூ. 50 கோடி லஞ்சம் கொடுப்பது பற்றி சுகேசிடம் டி.டி.வி.தினகரன் 5-க்கும் மேற்பட்ட செல்போன்களில் இருந்து பேசியதாக தெரிகிறது. அந்த செல்போன்களை கைப்பற்றுவதே டெல்லி போலீசாரின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. அந்த செல்போன்கள் கிடைத்தால் ரூ. 50 கோடி லஞ்சம் விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் வளைத்து விடலாம் என்று டெல்லி போலீசார் கணக்கு போடுகிறார்கள்.

    ரூ. 50 கோடி லஞ்சம் கொடுக்க முடிவு செய்யப்பட்ட போது முதல் தவணையாக ரூ.10 கோடி கொடுத்துள்ளனர். இந்த ரூ.10 கோடி மல்லிகார்ஜுனா மூலம் கை மாறியுள்ளது. அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் சிலர் இந்த பணத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பான ஆவணங்கள் ஏதேனும் சிக்குமா? என்றும் டெல்லி போலீசார் சோதனையை தொடங்கியுள்ளனர்.

    ரூ.10 கோடி பணத்தை திரட்டிய மல்லிகார்ஜுனா அதை சென்னையில் இருந்து டெல்லிக்கு அனுப்ப ஹவாலா ஏஜெண்டு உதவியை நாடியுள்ளார். அதன் பேரில்தான் கொச்சியைச் சேர்ந்த ஹவாலா ஏஜெண்டு ஷேக் பைசல், சென்னை வந்து பணத்தை பெற்று சென்றுள்ளார்.

    பிறகு அந்த தொகை டெல்லி சாந்தினி சவுக்கில் உள்ள 2 ஹவாலா ஏஜெண்டுகள் மூலம் தரகர் சுகேஷ் கைக்கு சென்றுள்ளது. அதில் ரூ. 1.3 கோடி மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மீதமுள்ள ரூ. 8.7 கோடி யாரிடம் சென்றது என்பதில் இன்னமும் மர்மம் நீடிக்கிறது. அந்த மர்மத்தை உடைக்கவே டெல்லி குற்றப்பிரிவு போலீசார் சென்னை, பெங்களூர், கொச்சியில் தங்களது அடுத்தக்கட்ட அதிரடியை இன்று தொடங்கியுள்ளனர்.

    போலீசாரின் விசாரணை வளையம் விரிவடையும் போது சில உயர் அதிகாரிகள் சிக்குவார்கள் என்று தெரிகிறது. அதுபோல சுகேசிடம் தொடர்பில் இருந்த சில தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகளும் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மொத்தத்தில் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் எல்லா முறைகேடுகளையும் டெல்லி போலீசார் கண்டு பிடித்து விட்டனர். குறிப்பாக இடைத்தரகர் சுகேஷ் முதலிலேயே எல்லாவற்றையும் புள்ளி விபரமாக போலீசாரிடம் சொல்லி விட்டான்.

    அடுத்து தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனா, உதவியாளர் ஜனார்த்தனன் ஆகியோரும் ஓரளவு தகவல் கொடுத்தனர். இந்த தகவல்களுக்கான ஆதாரங்கள் மட்டுமே டெல்லி போலீசாருக்கு தேவைப்படுகிறது. அந்த ஆதாரங்கள் கிடைத்து விட்டால் ரூ. 50 கோடி லஞ்சம் விவகாரம் இறுதிக்கட்டத்துக்கு வந்து விடும்.

    Next Story
    ×