search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர், திருவண்ணாமலையில் 108 டிகிரி வெயில்: இரவில் இடி - மின்னலுடன் மழை
    X

    வேலூர், திருவண்ணாமலையில் 108 டிகிரி வெயில்: இரவில் இடி - மின்னலுடன் மழை

    வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பகல் நேரத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் அதேசமயம் இரவில் அவ்வப்போது இடி-மின்னலுடன் மழையும் பெய்து வருகிறது.
    வேலூர்:

    வேலூரில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே 111 டிகிரி வரை வெயில் கொளுத்துகிறது. தொடர்ந்து தினமும் 105 டிகிரிக்கு குறையாமல் வெயில் வாட்டுகிறது. இதனால் பகல் நேரங்களில் அனல்காற்று வீசுகிறது. பொதுமக்கள் வெளியே நடமாட முடியாமல் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சுட்டெரிக்கும் வெயில் தாக்கத்தில் இருந்து தங்களை காத்துக்கொள்ள பொதுமக்கள் குளிர்பானம், இளநீர், தர்பூசணி கடைகளுக்கும், ஐஸ்கிரீம் கடைகளுக்கும் படையெடுத்தனர். இரவிலும் வெயில் தாக்கத்தால் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். குழாய்களில் வரும் தண்ணீர் வெந்நீர் போன்றும், மின்விசிறிகளில் இருந்து வரும் காற்று அனலாகவும் இருந்தது.

    தினமும் மாலை நேரங்களில் மழை வருவது போன்ற சூழ்நிலை காணப்பட்டு வந்தது. இதனால் இரவில் மழைபெய்யும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து ஏமாற்றத்துக்குள்ளானார்கள். இந்த நிலையில் நேற்று பகலில் வெயில் வறுத்தெடுத்தது. 108 டிகிரி வெயில் பதிவானது. மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    இரவு 7.30 மணிக்கு லேசாக மழைபெய்யத் தொடங்கியது. தொடர்ந்து இடி-மின்னலுடன் மழைபெய்தது. சுமார் ½ மணிநேரம் மழைநீடித்தது. பின்னர் சிறிதுநேரம் லேசாக மழைதூறியது. இதனால் குளிர்ந்த காற்றும் வீசியது.

    அரக்கோணத்தில் மதியம் வெயில் கொளுத்தியது. மாலை 5.30 மணியில் சூறாவளி காற்றும் வீசியது. இதனால் சில பகுதிகளில் கடைகளில் முன்பாக வைக்கபட்டு இருந்த விளம்பர போர்டுகள், டிஜிட்டல் பேனர்கள் கீழே விழுந்தது.

    பின்னர் 6 மணி அளவில் ஆலங்கட்டி மழை பெய்ய தொடங்கியது. ½ மணி நேரம் மழை பெய்தது. இந்த மழையால் அனல் காற்று குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் சுமார் 40 நிமிடம் அரக்கோணம் பகுதியில் மின்தடை ஏற்பட்டது.

    வாணியம்பாடி பகுதியில் கடந்த ஒரு வார காலமாக கடுமையான சுட்டரிக்கும் வெயிலால் பொது மக்கள் மிகவும் பாதிப்படைந்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்த நிலையில் ராமநாயக்கன்பேட்டை, அம்பலூர் மற்றும் சுற்று பகுதியில் ஆலங்கட்டியுடன் பலத்த மழை பெய்தது.

    திருவண்ணாமலையில் நேற்று மதியம் வெயில் கொளுத்தியது. 108.5 டிகிரி வாட்டியது. கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் திருவண்ணாமலை நகரை மேகம் சூழ்ந்து மழை வருவதுபோல் காணப்படும். ஆனால் மழை வராமல் ஏமாற்றியது. நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் திடீரென 10 நிமிடங்கள் மழை பெய்தது.

    ஆரணியில் நேற்று இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை பலத்த மழை பெய்தது. இதேபோல சந்தவாசல் பகுதியிலும் மழை பெய்தது.

    இந்த திடீர் மழையால் வேலூர், திருவண்ணாமலையில் வீசிய அனல் காற்று குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. கோடைவெயிலில் தவித்து வந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இரவில் நிம்மதியாக தூங்கினர்.
    Next Story
    ×