search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யாரும் எங்களை பின்னால் இருந்து இயக்கவில்லை: வைத்திலிங்கம்
    X

    யாரும் எங்களை பின்னால் இருந்து இயக்கவில்லை: வைத்திலிங்கம்

    யாரும் எங்களை பின்னால் இருந்து இயக்கவில்லை என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணியின் பேச்சுவார்த்தை குழு தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. கூறியுள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க.வில் இரு அணிகளையும் இணைப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    இதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணியின் பேச்சுவார்த்தை குழு தலைவராக வைத்திலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-

    கேள்வி:- இரு அணிகளும் இணைவது சம்பந்தமான பேச்சுவார்த்தை நடத்துவதில் தள்ளாட்டம் இருப்பதற்கு என்ன காரணம்?

    பதில்:- நாங்கள் எப்போதுமே பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். இது சம்பந்தமாக ஓ.பன்னீர் செல்வம் அணி தலைவர் கே.பி.முனுசாமியிடம் நான் தொடர்பு கொண்டு பேசினேன்.

    திங்கட்கிழமை பேச்சுவார்த்தை தொடங்குவதாக இருந்தது. ஜே.சி.டி. பிரபாகரனை தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால், முடியவில்லை.

    அமைச்சர் சி.வி. சண்முகம், பி.எச். மனோஜ் பாண்டியனை தொடர்பு கொண்டார். ஆனால், அவர்கள் 2 நிபந்தனைகளை (சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்) முன்வைத்து பேச்சுவார்த்தைக்கு வரவில்லை.

    எல்லாவற்றுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

    கே:- உங்கள் அணியினர் டி.டி.வி. தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினரை தொடர்பில் இருந்து விலக்கி வைத்து விட்டதாக சொல்கிறீர்கள். ஆனால், உங்களுடைய கட்சி அமைப்பு அவர்களுடன் தொடர்பில் உள்ளது. ஏன் இப்படி நடக்கிறது?

    ப:- நாங்கள் அவர்களை ஒதுக்கி வைத்து விட் டோம். அவர்களும் கட்சி மற்றும் ஆட்சி விவகாரங்களில் இருந்து விலகியே இருக்கிறார்கள். எல்லாவற்றையும் ஒரே நாளில் செய்து விட முடியாது.

    நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையை பொருத்தவரை ஒரு நாளில் செய்து விடக்கூடிய வி‌ஷயம் அல்ல. அந்த பத்திரிகை ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட அறக்கட்டளை மூலம் நடத்தப்படுகிறது. இதில், பல சட்ட பிரச்சனைகள் உள்ளன. குறிப்பாக இந்த விவகாரம் தேர்தல் கமி‌ஷன் முன்பு இருக்கிறது.

    கே:- சசிகலா குடும்பத்தினரை கட்சி பொறுப்பில் இருந்து நீக்குவதற்கு ஏன் தயக்கம் காட்டுகிறீர்கள்?

    ப:- இதில், தயக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை. சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்ததற்கு எதிராக தேர்தல் கமி‌ஷன் முன்பு பிரச்சனை உள்ளது.

    கட்சியில் இருந்து விலகி இருப்பதாக தினகரன் அவராகவே கூறி இருக்கிறார். ஜெயலலிதாவால் தேர்வு செய்யப்பட்ட கட்சி நிர்வாகிகள் இருபக்கமும் இருக்கிறார்கள். தேர்தல் கமி‌ஷனின் முடிவை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம். எல்லா வி‌ஷயத்தையும் பேச்சுவார்த்தை மூலம்தான் முடிவுக்கு கொண்டு வர முடியும்.

    கே:- சசிகலாவின் படம் கொண்ட பேனர்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் இருக்கும் நிலையில், ஓ.பன்னீர் செல்வம் அணியினரை நீங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக குற்றம் சாட்டுகிறார்களே?



    ப:- சசிகலா படங்களை அகற்றுவதில் எந்த தயக்கமும் இல்லை. அவர்கள் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார்கள். இதுபோன்ற முட்டுக்கட்டைகளுக்கெல்லாம் எளிதாக தீர்வு காண முடியும். இதற்காகத்தான் அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறோம்.

    இரட்டை இலை சின்னம் தேர்தல் கமி‌ஷனின் முடக்கத்தில் உள்ளது. அவற்றை மீட்பதற்கு இரு தரப்பினரும் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார்கள். இதில், பல சட்ட சிக்கல்கள் உள்ளன.

    ஆனால், இவற்றை அவர்கள் புரிந்து கொண்டது போல் தெரியவில்லை. நாங்கள் எப்போதும் திறந்த மனதுடன் இருக்கிறோம். பேச்சுவார்த்தை மூலம்தான் எல்லா வி‌ஷயத்துக்கும் தீர்வு காண முடியும்.

    கே:- இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுத்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகருடன் தினகரன் தொடர்பு வைத்து இருந்ததாக கூறி இருக்கிறார். இது அ.தி.மு.க. கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தாதா?

    ப:- இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. கற்பனையான வி‌ஷயங்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது.

    கே:- பேச்சுவார்த்தை முட்டுக்கட்டையை உடைக்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

    ப:- பேச்சுவார்த்தைக்கு வருமாறு அவர்களை அழைக்கிறோம். முதலில் மேஜையில் கூட்டாக உட்கார்ந்து பேச வேண்டும். நாங்கள் அவர்களுடைய கோரிக்கையை ஏற்க மறுத்தால் அதுபற்றி அவர்கள் கருத்து தெரிவிக்கலாம்.

    ஆனால், பேச்சுவார்த்தை நடப்பதற்கு முன்பாகவே அவர்களாகவே ஒரு முடிவு எடுக்க வேண்டாம். இன்றைக்கு கூட அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு தயாராக இருக்கிறோம்.

    கே:- இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக சசிகலா குடும்பத்தினர் ஆடும் நாடகத்தின்படி உங்கள் தரப்பினர் செயல்படுவதாகவும், உங்களை சிலர் பின்னால் இருந்து இயக்குவதாகவும் கூறப்படுகிறதே?

    ப:- இவை அனைத்தும் முற்றிலும் தவறானது. யாரும் எங்களை இயக்கவில்லை. நாங்கள் திறந்த மனதுடன் வெளிப்படையாக இருக்கிறோம்.

    கே:- இரு தரப்பினருமே முதல்-அமைச்சர் பதவி மீது கண்வைத்து இருப்பதாக கூறப்படுகிறதே? இது சம்பந்தமாக என்ன ‘பார்முலா’ வைத்திருக்கிறீர்கள்?

    ப:- இதில், வேறு எதைப்பற்றியும் சிந்திக்க தேவையில்லை. அவர்கள் முதலில் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். நாங்கள் அவர்களுடைய கோரிக்கைகளை ஏற்கவில்லை என்றால் பின்னர் அவர்கள் எது வேண்டுமானாலும் கூறட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×