search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
    X

    தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்

    தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் நேற்று தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் குமரன் தலைமை தாங்கினார். செயலாளர் மோசஸ் பால் கோரிக்கையை விளக்கி பேசினார்.

    போராட்டத்தில் அரசு டாக்டர்கள் மேற்படிப்பு படிப்பதற்கு 50 சதவீதம் ஒதுக்கீட்டை கோர்ட்டு ரத்து செய்து உள்ளது. இந்த உரிமை பறிக்கப்படும் போது, அரசு டாக்டர்களை கிராமப்புற சேவையில் ஈடுபடுத்த முடியாது. ஆகையால் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு அரசு டாக்டர்களுக்கு முதுநிலை மேற்படிப்பில் 50 சதவீதம் இடஒதுக்கீட்டுக்கு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். போராட்டத்தில் திரளான டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

    மருத்துவ பட்ட மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு சட்டரீதியான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் கடந்த 20–ந் தேதியில் இருந்து தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 5–வது நாளான நேற்று 30–க்கு மேற்பட்ட டாக்டர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து, தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்க சென்றனர்.

    இதனால் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்கு வந்தவர்களுக்கு, அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த தலைமை டாக்டர் கமலவாசன், நிலைய மருத்துவர் டாக்டர் பூவேசுவரி, டாக்டர் ராஜேஷ் ஆகியோர் சிகிச்சை அளித்தனர். இதனால் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்து நின்று சிகிச்சை பெற்றுச் சென்றனர்.

    திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் 12 டாக்டர்களில் 10 பேர் தற்செயல் விடுப்பு எடுத்தனர். இதனால் அவசர சிகிச்சை பிரிவில் மட்டும் 2 டாக்டர்கள் பணியில் இருந்தனர். வெளிநோயாளிகள் பிரிவில் டாக்டர்கள் சிகிச்சை அளிக்காததால், சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் 14 டாக்டர்களில் 10 பேர் தற்செயல் விடுப்பு எடுத்தனர். 4 டாக்டர்கள் மட்டும் பணிக்கு வந்தனர். இதனால் வெளிநோயாளிகள் பிரிவில் நீண்ட வரிசையில் காத்து நின்று, பொதுமக்கள் சிகிச்சை பெற்று சென்றனர்.

    இதேபோன்று சாத்தான்குளம் உள்ளிட்ட அரசு ஆஸ்பத்திரிகளிலும், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பெரும்பாலான டாக்டர்கள் தற்செயல் விடுப்பு எடுத்ததால், அங்கு சிகிச்சை பெற முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
    Next Story
    ×