search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட எதிர்ப்பு
    X

    நகராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட எதிர்ப்பு

    ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் திட்டத்தின் கீழ் ஜெயங்கொண்டம்-விருத்தாசலம் ரோட்டில் அமைந்துள்ள வாரச்சந்தையின் கிழக்கு பகுதியில் இடத்தை தேர்வு செய்து ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பில் புதிதாக நகராட்சி அலுவலக கட்டிடம் கட்ட கட்டுமான பணிக்கான பூமிபூஜை கடந்த 21-ந்தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பணிகள் நடந்து வந்தன.

    இந்த நிலையில் நேற்று வாரச்சந்தை என்பதால் வியாபாரிகள் கடைகள் போட வந்தபோது, 300 வியாபாரிகளுக்கு இடம் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள், அங்கு நகராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    வேறு இடத்தை அப்போது வியாபாரிகள் கூறுகையில், நாங்கள் 40 ஆண்டு காலமாக சந்தையை இதே இடத்தில் தான் நடத்தி வருகிறோம். பொதுமக்களுக்கு இதுதான் மையமாகவும், வசதியான இடமாகவும் இருக்கிறது. நகராட்சி அலுவலகம் கட்ட நகரில் சின்னவளையம், வேலாயுதநகர், மகிமைபுரம், கீழக்குடியிருப்பு, மேலக்குடியிருப்பு, மலங்கன் குடியிருப்பு, கரடிகுளம் போன்ற இடங்களில் ஒன்றை தேர்வு செய்து கட்டிக் கொள்ளலாம். ஆனால் நாங்கள் சந்தையை அதுமாதிரியான இடத்தில் வைத்தால் மக்களால் அவ்வளவு தூரம் வர இயலாது. ஆகவே மாவட்ட நிர்வாகமும், நகராட்சி ஆணையரும் இதுதொடர்பாக நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும். தற்போது புதிய கட்டிட கட்டுமான பணியை நிறுத்த வேண்டும். மேலும் நகராட்சி அலுவலகத்துக்கு வேறு இடத்தை தேர்வு செய்து நகராட்சி நிர்வாகத்தினர் கட்டிடம் கட்ட வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுசாமி, நகராட்சி பொறியாளர் புகழேந்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சந்தையில் கடை வைக்க இடம் இல்லாத வியாபாரிகளுக்கு அங்கேயே வெளியில் வேறு இடத்தை தேர்வுசெய்து கொடுப்பதாகவும், அதுவரை கட்டுமான பணியை நிறுத்தி வைப்பதாகவும் தெரிவித்தனர்.

    இதையடுத்து வியாபாரிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  
    Next Story
    ×