search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு
    X

    நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

    நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் மேற்கொள்வதை எதிர்த்து தமிழருவி மணியன் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை ஐகோர்ட்டு ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தது.
    சென்னை:

    காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக தனியார் நிறுவனத்துடன் மத்திய அரசு மார்ச் 27-ந் தேதி ஒப்பந்தம் செய்துள்ளது. ஓ.என்.ஜி.சி. நிறுவனம் காவிரி டெல்டா பகுதியில் ‘ஹைட்ரோ கார்பன்’ பரிசோதனை நடத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் திட்டம் நிறுத்தப்பட்டது.



    ஆனால், தற்போது நெடுவாசலில் மீண்டும் இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்தியதால் அங்கு நிலத்தடி நீர் மாசடைந்துள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளது. எனவே இத்திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும். நில அதிர்வு ஏற்படும் அபாயமும் உள்ளது.

    எந்த ஒரு திட்டத்துக்கும் பொது டெண்டர் அடிப்படையில் தான் ஒப்பந்த பணிகள் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த பொது டெண்டர் நடவடிக்கைகளை ‘இ-டெண்டர்’ முறையில் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

    விவசாயிகளுடன் கலந்தாலோசிக்காமல், நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் ஒப்பந்த பணியை கர்நாடக மாநில எம்.பியும், முன்னாள் மத்திய மந்திரியுமான சித்தேஷ்வரா என்பவரின் மனைவிக்கு சொந்தமான ஜெம் லேபரட்டரி என்ற நிறுவனத்துக்கு மத்திய அரசு சட்டவிரோதமாக வழங்கியுள்ளது.

    சித்தேஷ்வராவின் சகோதரர் லிங்கராஜூ ஏற்கனவே சட்டவிரோதமாக இரும்பு தாதுக்களை எடுத்த வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டவர். மத்திய அரசு செய்துள்ள இந்த ஒப்பந்தமே பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மேற்கொள்ள தடைவிதிப்பதுடன், இத்திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

    இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை ஜூன் 8-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    Next Story
    ×