search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலித் பிரமுகர்கள் கொலையை வேடிக்கை பார்க்கும் போலீசார்: விடுதலை சிறுத்தைகள் கண்டனம்
    X

    தலித் பிரமுகர்கள் கொலையை வேடிக்கை பார்க்கும் போலீசார்: விடுதலை சிறுத்தைகள் கண்டனம்

    தலித் பிரமுகர்கள் வெடி குண்டு வீசி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.இந்த கொலையை வேடிக்கை பார்த்த போலீசாருக்கு விடுதலை சிறுத்தைகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    புதுச்சேரி:

    விடுதலை சிறுத்தைகள் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில வாரங்களாக புதுவை மாநிலத்தில் தலித் அரசியல் தலைவர்கள் படுகொலை கொடூரமாக நிகழ்ந்து வருகிறது. அமைச்சர் கந்தசாமியின் தீவிர ஆதரவாளரான கிருமாம்பாக்கம் வீரப்பன், கூடப்பாக்கம் காலனியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் மாயவன் ஆகியோர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் திருபுவனையை சேர்ந்த தொழில் அதிபர் வேலழகன் கொத்தபுரி நத்தத்தில் வெடிகுண்டு வீசி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

    ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பாகுபாடின்றி தலித் அரசியல் பிரமுகர்கள் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்படுவது தொடர்வது காவல் துறையின் கையாலாகாதனத்தையும், இறப்பது தலித்தானே என்ற அலட்சியப் போக்கையும் தெளிவாக காட்டுகிறது.

    இந்த தொடர் படுகொலைகளை அந்தந்த பகுதி காவல்துறையின் அதிகாரிகள் விசாரிப்பதால் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிப்பது என்பது சாத்தியம் இல்லை.

    கடந்த ஆட்சியில் காவல் துறைக்கும், ரவுடிகளுக்கும் உள்ள தொடர்பு இன்னும் நீடிக்கிறதோ என்கிற அச்சம் பொது வெளியில் பேசப்படுகிறது. ஒவ்வொரு கொலைக்கும் முன்பு கூலிப்படைகள் செயல்பட்டுள்ளதை கண்டறிந்து முதல்- அமைச்சர் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அரசியல் பிரமுகர்களின் படுகொலைகளால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச உணர்வை நீக்க வேண்டிய கடமை புதுவை அரசுக்கும், காவல்துறைக்கும் உள்ளது.

    பா.ஜனதாவின் மாணவர் அமைப்பு எல்லா பல்கலைக்கழகங்களிலும் சாதி வெறி, மத வெறியூட்டி மாணவர்களின் ஒற்றுமையை கெடுத்து வன்முறையை தூண்டி வருகிறது. புதுவை பல்கலைக்கழகத்தில் காவியமாக்கலை வேகப்படுத்தும் செயல்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.

    அரசியல் தலைவர்களை பேச அனுமதிக்காத நடைமுறை இருக்கும் போது மதவெறி அமைப்பை சேர்ந்த தருண் விஜயை அழைத்து வந்து பேச வைத்த சக்திகள் யார்? ஜனநாயக ரீதியாக எதிர்த்து முழக்கமிட்ட மாணவ- மாணவிகள் மீது காவல்துறை அத்து மீறி தாக்குதல் தொடுத்ததை வன்மையாக கண்டிக்கிறோம்.

    இது தொடர்பாக புதுவை அரசும், பல்கலைக்கழகமும் நீதி விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு தேவ.பொழிலன் அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×