search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விடுமுறை தினங்களில் முறையாக நேரம் ஒதுக்காததால் அரசு பஸ் டிரைவர்கள் திடீர் தர்ணா
    X

    விடுமுறை தினங்களில் முறையாக நேரம் ஒதுக்காததால் அரசு பஸ் டிரைவர்கள் திடீர் தர்ணா

    திருவண்ணாமலையில் விடுமுறை தினங்களில் முறையாக நேரம் ஒதுக்காததால் அரசு பஸ் டிரைவர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் இருந்து நாள்தோறும் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை சென்னைக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் கூட்ட நெரிசலுக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.

    இந்நிலையில், கடந்த சில வாரங்களாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை செல்லும் அரசு பஸ்கள் திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் மாலை 6 மணிக்கு மேல் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக போக்குவரத்து கழக அதிகாரிகள், சென்னை செல்லும் அரசு பஸ்களை அண்ணா நுழைவு வாயில் அருகே தற்காலிக பஸ் நிலையத்தில் நிறுத்தும்படி டிரைவர்களிடம் கூறியுள்ளனர்.

    அதன்படி, அரசு பஸ் டிரைவர்கள் நேற்று மாலை 6 மணியிலிருந்து தற்காலிக பஸ் நிலையத்தில் பஸ்களை நிறுத்தியுள்ளனர். ஆனால், இரவு 11 மணி வரை தற்காலிக பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட பஸ்களை சென்னை செல்வதற்கு யாரையும் அழைக்கவில்லை. இதனால் டிரைவர்கள் சிலர் பஸ் நிலையத்திற்கு சென்றனர்.

    அப்போது சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு வந்த பஸ்களை மீண்டும் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டது.

    இது குறித்து, பஸ் நிலையத்தில் இருந்த போக்குவரத்து கழக, அதிகாரிகளிடம் டிரைவர்கள் கேட்டபோது, நாங்கள் அழைக்கும்போது நீங்கள் வந்தால் போதும், அதுவரை அங்கேயே காத்திருக்க வேண்டும் என கூறினராம்.

    இதனால் ஆத்திரமடைந்த டிரைவர்கள் தற்காலிக பஸ் நிலையத்திற்கு வந்து, முறையான நேரம் ஒதுக்காத அதிகாரிகளை கண்டித்து நேற்றிரவு 11.30 மணியளவில் திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தர்ணாவில் ஈடுபட்ட டிரைவர்கள் கூறுகையில்:-அதிகாரிகள் சிலர் தங்களுக்கு விருப்பமான பஸ்களை மட்டும் மீண்டும் சென்னைக்கு இயக்குகின்றனர்.

    அதுமட்டுமின்றி சனி, ஞாயிற்றுகிழமைகளில் வழக்கமாக செல்லும் பஸ்களைவிட கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சிறப்பு பஸ்களை இயக்குவதாக கூறி அதிகாரிகள் ஊக்கத்தொகை பெறுகின்றனர்.

    மேலும் கிராம புறங்களுக்கு செல்லும் பஸ்களை கட்செய்துவிட்டு சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கு இயக்குகின்றனர். எங்களுக்கு முறையான நேரம் ஒதுக்காததால் இரவு நேரங்களில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்றனர். தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    Next Story
    ×