search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்
    X

    அரசு ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்

    தமிழகத்தில் நாளை விவசாயிகளுக்கு ஆதரவாக முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ள நிலையில், அரசு ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.

    தி.மு.க. அழைப்பு விடுத்த முழுஅடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. வணிகர் சங்கங்களும் முழு ஆதரவை அளித்துள்ளன. ஓட்டல்கள் மூடப்படுகின்றன. தியேட்டர்களில் பகல் காட்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன. போக்குவரத்து தொழிலாளர்களும் முழு அடைப்பில் பங்கேற்கிறார்கள்.

    முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ள அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்களை சேர்ந்த டிரைவர்கள் பஸ்களை ஓட்ட மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். வியாபாரிகள் கடைகளை அடைத்து முழு அடைப்பில் கலந்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர்.

    தமிழகத்தில் ஆளும் கட்சியான அ.தி.மு.க. முழு அடைப்பில் கலந்து கொள்ளவில்லை. நாளை வழக்கம் போல் பஸ்களை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் பலத்த பாதுகாப்புடன் நாளை பஸ்கள் ஓடும். தமிழகம் முழுவதும் பஸ் டெப்போக்கள் முன்பு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த சூழ்நிலையில், அரசு ஊழியர்கள் நாளை முதல் காலவலைரயற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய பென்சன் திட்டத்திற்கு எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் சுமார் 5 லட்சம் ஊழியர்கள் நாளை முதல் பணிக்கு செல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
    Next Story
    ×