search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி அணியினரின் புதிய சமரச திட்டம்
    X

    எடப்பாடி அணியினரின் புதிய சமரச திட்டம்

    அ.தி.மு.க.வில் பிளவுப்பட்ட 2 அணிகளையும் இணைப்பதற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ள நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினர் வகுத்த புதிய சமரச திட்டத்தை ஓ.பி.எஸ். அணியிடம் வழங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
    சென்னை:

    ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அவரது தோழி சசிகலா முதல்- அமைச்சராக முயன்றதால் அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டது.

    சசிகலா தரப்பினர் அ.தி. மு.க. அம்மா என்ற பெயரிலும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா என்ற பெயரிலும் செயல்பட்டு வருகிறார்கள்.

    இந்த இரு அணிகளையும் ஒன்றாக இணைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அ.தி.மு.க. கட்சி பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் மீண்டும் பெற வேண்டுமானால் இரு அணிகளும் இணைவதை தவிர வேறு வழி இல்லை என்பதால் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள்.

    பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சசிகலா அணி தரப்பில் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் 7 பேர் குழுவும், ஓ.பி.எஸ். அணி தரப்பில் முனுசாமி தலைமையில் 7 பேர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 14 பேரும் இன்று (திங்கட்கிழமை) முதல் முறையாக சந்தித்து இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்குகிறார்கள்.

    ஒரு வாரத்துக்குள் பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டு விடும் என்று இரு அணி மூத்த தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    இரு அணிகளின் பேச்சுவார்த்தை தொடங்கும் நிலையில் முதல்-அமைச்சர், பொதுச்செயலாளர் பதவி யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புதான் அனைத்துத் தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது. முதல்- அமைச்சர் பதவியை பன்னீர்செல்வத்துக்கு விட்டுத் தர வேண்டும் என்று ஓ.பி.எஸ். அணியினர் வற்புறுத்தினார்கள். அதை மையமாக வைத்தே ஓ.பி.எஸ். அணியினர் கோரிக்கைகளை வெளியிட்டனர்.

    ஆனால் சசிகலா அணி தரப்பில் தொடக்கத்தில் இருந்தே அது ஏற்கப்படவில்லை. எடப்பாடி பழனிசாமிதான் முதல்-அமைச்சர் பதவியில் நீடிப்பார் என்று திட்டவட்டமாக கூறப்பட்டது. நேற்று அமைச்சர் ஜெயக்குமார், இரு அணிகள் இணைப்புக்காக எனது நிதி அமைச்சர் பதவியை விட்டுத் தர தயார் என்று கூறினார்.


    இதன் மூலம் சசிகலா தரப்பினர் முதல்-அமைச்சர் பதவியை விட்டுத்தர மாட்டார்கள் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.

    முதல் - அமைச்சர் பதவியை பெற இயலாத நிலையில், அடுத்து எத்தகைய பதவிகளைப் பெறுவது? எப்படி செயல்படுவது? என்று ஓ.பி.எஸ். அணியினர் ஆலோசனை நடத்தியபடி உள்ளனர். சில குறிப்பிட்ட பதவிகளை பெற்றே தீர வேண்டும் என்று அவர்கள் தீவிரமாக உள்ளனர்.

    இந்த நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினர் புதிய சமரச திட்டம் ஒன்றை வகுத்துள்ளனர். அந்த புதிய சமரச திட்டம் நேற்று ஓ.பி.எஸ். அணியிடம் வழங்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    புதிய சமரச திட்டத்தின் படி எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் பதவியில் நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. வைத்திலிங்கம் எம்.பி.யை பொதுச்செயலாளர் ஆக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் புதிதாக அ.தி.மு.க.வில் இரண்டு துணை பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு துணை பொதுச்செயலாளர் பதவியை ஓ.பி.எஸ். அணிக்கும், மற்றொரு துணை பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி அணிக்கும் வழங்கலாம் என்று சமரச திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல்களை அ.தி.மு.க. மூத்த எம்.பி. ஒருவர் உறுதி படுத்தினார்.

    ஓ.பி.எஸ். அணியில் உள்ள மாஃபா. பாண்டியராஜன், செம்மலை இருவருக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு இருந்தது. அதை எடப்பாடி பழனிசாமி அணியினர் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதையடுத்து பாண்டியராஜனும், செம்மலையும் முக்கிய இலாகா கேட்டு விருப்பம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

    ஓ.பி.எஸ். அணியினர் மதுசூதனனை பொதுச்செயலாளர் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியபடி உள்ளனர். ஆனால் மதுசூதனனுக்கு மீண்டும் அவைத் தலைவர் பதவியை கொடுக்க புதிய சமரச திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

    புதிய சமரச திட்டத்தின் பரிந்துரைகளை ஓ.பன்னீர் செல்வம், மதுசூதனன், மாஃபா பாண்டியராஜன், செம்மலை உள்பட பலரும் ஏற்க தயார் நிலையில் இருப்பதாக தெரிகிறது. ஆனால் கே.பி.முனுசாமி, மைத்ரேயன் எம்.பி., மனோஜ்பாண்டியன் ஆகிய மூவருக்கும் புதிய சமரச திட்டம் பிடிக்கவில்லை. எனவே அவர்கள் மூவரும் சற்று அதிருப்தி அடைந்துள்ளனர்.


    அவர்கள் மூன்று பேரும், “உள்ளாட்சி தேர்தலிலும், அடுத்து வரும் தேர்தல்களிலும் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்தவர்களுக்கு 50 சதவீத இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறி வருகிறார்கள். அவர்கள் மூவரின் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட முடியாத அளவுக்கு இருப்பதாக எடப்பாடி அணியினர் சொல்கிறார்கள்.

    இந்த நிலையில் ஓ.பி.எஸ். அணியினர் ஏற்கனவே வெளியிட்ட மூன்று முக்கிய கோரிக்கைள் என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகரித்துள்ளது.

    ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களுக்கு விடை காண நீதி விசாரணை நடத்தப்படுமா?

    அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா, டி.டி.வி.தினகரன் குடும்பத்தினர் நிரந்தரமாக விலக்கி வைக்கப்படுவார்களா?

    ஜெயலலதாவின் போயஸ் கார்டன் வீடு, நினைவிடமாக மாற்றப்படுமா?

    இந்த மூன்று கோரிக்கைகளும் முனைப்பு பெறுமா? அல்லது முதலிலேயே கிள்ளி எறியப்பட்டு முறியடிக்கப்படுமா? என்பது இரு அணிகள் இணைப்பு பேச்சு வார்த்தை முடியும் போது வெளிச்சத்துக்கு வந்து விடும்.
    Next Story
    ×