search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கன்னிமாரா நூலகத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நூல்கள் கண்காட்சி
    X

    கன்னிமாரா நூலகத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நூல்கள் கண்காட்சி

    உலக புத்தக தினத்தையொட்டி சென்னை கன்னிமாரா நூலகத்தில் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட அபூர்வமான நூல்கள் கண்காட்சி தொடங்கியது. 29-ந்தேதி வரை இந்த கண்காட்சி நடக்கிறது.
    சென்னை:

    உலக புத்தக தினத்தையொட்டி சென்னை, கன்னிமாரா பொது நூலகத்தில் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான மற்றும் அபூர்வமான நூல்கள் கண்காட்சி தொடக்க விழா நேற்று நடந்தது. நூலகர் மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கினார். தமிழக நீர்வடி பகுதி மேலாண்மை முகமை செயல் இயக்குனர் இரா.ஆனந்தகுமார் கண்காட்சியை தொடங்கிவைத்து பேசியதாவது:-

    உலக புகழ்பெற்ற நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியரின் பிறந்தநாளான ஏப்ரல் 23-ந்தேதி ஒவ்வொரு ஆண்டும் உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. புத்தகங்களை ஆழமாக படிக்கவும், புத்தகத்துக்கு நன்றி செலுத்துவதற்காகவும் விழா நடத்தப்படுகிறது.

    நூலகங்களில் சென்று படிக்கும் போது நம்முடைய பாடங்களை ஆழமாக படிக்க முடிவதுடன், நம் கவனம் முழுவதும் நூலிலேயே இருக்கும். அதேபோல் ஒரே தலைப்பில் பல்வேறு ஆசிரியர்களால் எழுதப்பட்ட நூல்களில் இருந்து தகவல்களை திரட்டி தகவல் களஞ்சியத்தை நம்மால் உருவாக்க முடியும்.

    திரும்ப, திரும்ப நம் பாடங்களை படிக்க நூலகங்கள் உத்வேகமாக இருக்கும். புத்தகங்களை நேசித்து, நல்ல கருத்துகளை உள்வாங்கி கொண்டு, நல்ல எண்ணங்களுடன், பயனுள்ள வாழ்க்கை வாழ உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முடிவில் நூலக குறிப்பு உதவியாளர் புகழானந்த் நன்றி கூறினார். விழாவில் போட்டி தேர்வுகளுக்கு தயார்படுத்தி வரும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    கண்காட்சியில் 1548-ம் ஆண்டு கிரேக்க லத்தீன் மொழியில் எழுதப்பட்ட ‘பிளட்டோவின் தத்துவங்கள்’, 1608-ம் ஆண்டு வெளியான பைபிள், 1781-ம் ஆண்டு வெளியான ‘ஞான முறைமைகளின் விளக்கம்’, 1800-ம் ஆண்டுகளில் வெளியான வீரமாமுனிவர் எழுதிய நூல்கள், 1858-ம் ஆண்டு வெளியான ‘இமயமலையில் உள்ள தாவரங்கள்’, அதே ஆண்டு வெளியான ‘மதுரா’ கிருஷ்ணர் புகைப்படங்கள் உள்ளிட்ட 300 பழமையான புத்தகங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இந்த கண்காட்சி 29-ந்தேதி வரை நடக்கிறது. தினசரி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர்.



    Next Story
    ×