search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதா கட்சிக்கு பின்வாசல் வழியாக தமிழ்நாட்டுக்குள் வரும் நோக்கம் இல்லை: வெங்கையா நாயுடு
    X

    பா.ஜனதா கட்சிக்கு பின்வாசல் வழியாக தமிழ்நாட்டுக்குள் வரும் நோக்கம் இல்லை: வெங்கையா நாயுடு

    பாரதிய ஜனதா கட்சிக்கு பின்வாசல் வழியாக தமிழ்நாட்டுக்குள் வரும் நோக்கம் இல்லை என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு திட்டவட்டமாக கூறினார்.
    ஆலந்தூர்:

    பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை மந்திரியுமான வெங்கையா நாயுடு நேற்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரிடம், தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வில் இரு அணிகள் உருவாகி, கருத்து வேறுபாடுகள் தலைதூக்கி இருப்பது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அவர் பதில் அளிக்கையில், “பிற கட்சிகளின் உள்விவகாரங்களில் பாரதிய ஜனதா கட்சியோ, மத்திய அரசோ தலையிடுவது இல்லை. அந்த கட்சியின் உள்விவகாரங்களைப் பொறுத்தமட்டில் அவர்கள்தான் பேசித்தீர்த்துக்கொள்ள வேண்டும். மாநிலத்தில் எப்போதும் நிலையான அரசு இருக்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் விருப்பமாக அமைந்துள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்” என்று தெரிவித்தார்.

    “அ.தி.மு.க. பிளவுபட்டுள்ளதை பயன்படுத்தி, பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் பின்வாசல் வழியாக வந்து கால் பதிக்க முயற்சிக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?” என வெங்கையா நாயுடுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதை அவர் திட்டவட்டமாக மறுத்தார். “அப்படி ஒரு நோக்கம், பாரதிய ஜனதா கட்சிக்கு இல்லை” என்று அவர் கூறினார்.



    “பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் ஒரு மாதத்தை கடந்து போராட்டம் நடத்தி வருகிறார்களே?” எனவும் வெங்கையா நாயுடுவிடம் நிருபர்கள் கேட்டனர்.

    அந்த கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், “விவசாயிகள் பிரச்சினையைப் பொறுத்தமட்டில் அது மாநில அரசின் பிரச்சினை” என்று குறிப்பிட்டார்.

    தமிழ்நாட்டில் வறட்சி நிலைமை குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு அனுப்பி வைக்கப்பட்டது, அந்த குழு செய்த சிபாரிசுகளின் அடிப்படையில் மாநில அரசுக்கு மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி வழங்கி உள்ளது என்றும் வெங்கையா நாயுடு சுட்டிக்காட்டினார்.

    தொடர்ந்து அவர் பேசும்போது, “எனது வருகையில் அரசியல் ரீதியில் ஒன்றும் விசேஷம் இல்லை. திரைப்படத்துறை தொடர்பான பிரச்சினைகளை தென் இந்திய நடிகர் சங்கத்தினருடன் விவாதிக்கத்தான் சென்னை வந்துள்ளேன்” என்று கூறினார்.
    Next Story
    ×