search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடைகளை தகர்த்தெறிந்து இலவச அரிசி வழங்குவோம்: நாராயணசாமி உறுதி
    X

    தடைகளை தகர்த்தெறிந்து இலவச அரிசி வழங்குவோம்: நாராயணசாமி உறுதி

    எந்த தடை ஏற்பட்டாலும் அதை தகர்த்தெறிந்து அனைத்து ரே‌ஷன் கார்டுகளுக்கும் இலவச அரிசியை வழங்குவோம் என முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    டெல்லியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நிதி அயோக் கூட்டம் நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியும், தலைமை செயலாளர் மனோஜ்பரிதாவும் பங்கேற்க உள்ளனர்.

    இந்த நிதி அயோக் கூட்டத்தில் எதைப்பற்றி விவாதிப்பது என்பது குறித்து முதல்அமைச்சர் நாராயணசாமி தலைமையில் தலைமைச் செயலக கருத்தரங்கு அரங்கில் கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், கமலகண்ணன் மற்றும் அரசு செயலாளர்கள், இயக்குனர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டம் காலை 10.30 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடந்தது. கூட்டத்தின் முடிவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாளை நடைபெறும் நிதி அயோக் கூட்டத்தில் புதுவை மாநிலத்தின் நிதி ஆதாரம், மத்திய நிதி கமி‌ஷனில் புதுவையை இணைப்பது, கடன் ரத்து, நீட் தேர்வில் விலக்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசவுள்ளோம். சட்டமன்றம் கொண்ட யூனியன் பிரதேசமாக புதுவை திகழ்கிறது.

    கடந்த காலங்களில் 100 சதவீதம் மானியத்தை மத்திய அரசு புதுவைக்கு வழங்கியது. ஆனால், தற்போது மாநிலங்களுக்கு வழங்கப்படுவதுபோல மானியம் மாற்றப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு ரூ.6,625 கோடி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் 95 சதவீதத்தை செலவு செய்துள்ளோம்.

    மத்திய அரசின் பண மதிப்பிழப்பு, மதுபான கடைகள் மூடல், மனைப்பதிவு நிறுத்தும் ஆகியவற்றால் புதுவைக்கு வரவேண்டிய வருமாய் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முழுமையாக திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.

    டெல்லிக்கு அடுத்த படியாக 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை புதுவையில் அமல்படுத்தி உள்ளோம். இதனால் ரூ.556 கோடி அரசுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.

    இவற்றையெல்லாம் தாண்டி 95 சதவீத நிதியை செலவு செய்துள்ளோம். கடந்தகால அரசுகள் 85 சதவீதத்திற்கு மேல் செலவு செய்தது கிடையாது.


    மத்திய அரசின் திட்டங்களான கிராமப்புற சுகாதாரம், கல்வி ஆகிய திட்டங்களில் நிதியை பெற வேண்டும் என அதிகாரிகளிடம் கூறியுள்ளோம். சுற்றுலா வளர்ச்சி, தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் தனி கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளோம். அனைத்து ரே‌ஷன் கார்டுகளுக்கும் 20 கிலோ தரமான அரிசி, முதியோர், விதவை மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம், மருத்துவம், பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி ஆகிய 3 திட்டங்களை அரசின் மிக முக்கிய திட்டங்களாக கருதுகிறோம்.

    இந்த திட்டங்களுக்கு எந்த தடை ஏற்பட்டாலும் அதை தகர்த்தெறிந்து நிறைவேற்றுவோம். பிற மாநிலங்களில் விவசாயிகள் பாதிக்கப்பட்டு தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளது. ஆனால், புதுவை அரசின் விவசாய கொள்கையாலும், திட்டங்களாலும் வறட்சி நிலவினாலும் விவசாயிகள் பாதிக்கப்படவில்லை. அவர்களுக்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் வைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×