search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுக்கடைக்கு இடம் கொடுத்த கட்டிட உரிமையாளர் வீடு முற்றுகை
    X

    மதுக்கடைக்கு இடம் கொடுத்த கட்டிட உரிமையாளர் வீடு முற்றுகை

    கோவை அருகே மதுக்கடைக்கு இடம் கொடுத்ததாக கட்டிட உரிமையாளர் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை,திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் புதிய டாஸ்மாக் கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மதுக்கடை திறக்கும் முன்னரே பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவதால் அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.

    துடியலூர் அருகே உள்ள கணுவாயில் இருந்து பன்னிமடை செல்லும் ரோட்டில் புதிதாக மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த ஆண்களும் பெண்களும் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து இருந்தனர்.

    இந்தநிலையில் நேற்று மாலை அந்த பகுதியில் மதுக்கடை திறக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்த பெண்கள் மதுக்கடை முன்பு திரண்டு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர்.

    கடையை மூடாவிட்டால் அசம்பாவிதம் நடைபெறும் என எச்சரித்தனர். இதனால் பயந்து போன மதுக்கடை ஊழியர்கள் கடையின் ‌ஷட்டரை மூடினர். இந்த தகவல் கிடைத்ததும் துடியலூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து பெண்களை சமாதானப்படுத்தினர்.

    மேலும் கடையை நிரந்தரமாக மூடுவது குறித்து அதிகாரிகளிடம் பேசி தீர்வு காண்பதாக தெரிவித்தனர். ஆனால் பெண்கள் சமாதானம் அடையவில்லை.

    இந்த மதுக்கடை நடத்துவதற்கு கணுவாய் பகுதியை சேர்ந்த கண்ணன் குமார் என்பவர் தனது இடத்தை வாடகைக்கு கொடுத்து இருந்தார். போராட்டம் நடத்திய பெண்கள் அவரது வீட்டுக்கு சென்று மதுக்கடை திறக்க இடம் கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டு கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    அப்போது வீட்டில் கண்ணன்குமார் இல்லை. அவரது மனைவி மட்டுமே வீட்டில் இருந்தார். கணவர் வந்ததும் இது குறித்து தெரிவிப்பதாக கூறினார். இதனையடுத்து பெண்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவாலா ஹட்டியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் தேவாலா ஹட்டியில் மதுக்கடை திறக்க ஏற்பாடு நடப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனை மீறி டாஸ்மாக் நிர்வாகம் அந்த பகுதியில் மதுக்கடையை திறந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கடையை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் இடம் கொடுத்த கட்டிட உரிமையாளர் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து உருவ பொம்மையை எரித்தனர்.

    மேலும் கூடலூர்- தேவாலா ரோட்டில் 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் செய்தனர். சாலையிலேயே உணவு சமைத்து சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும் கூடலூர் டி.எஸ்.பி. சக்திவேல் தலைமையிலான போலீசார் மற்றும் தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் 2 நாட்களுக்குள் கடையை மூட கலெக்டர் உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்தனர்.இதனையடுத்து போராட்டகாரர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
    Next Story
    ×