search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் மாவட்டத்தில் குடிநீர் திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு
    X

    அரியலூர் மாவட்டத்தில் குடிநீர் திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு

    அரியலூர் மாவட்டத்தில் குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் சரவணவேல்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அரியலூர்:

    அரியலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்லங்குறிச்சி ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியை ஆய்வு செய்து, விடுதியிலுள்ள கட்டிடத்தின் மேற்கூரையில் ஏற்பட்டுள்ள பழுது மற்றும் விடுதியின் சமையலறையை சுத்தமாக பராமரித்திடவும் வண்ணம் பூசிடவும், விடுதியில் மழைநீர் சேகரிப்பு தொட்டி உடனடியாக அமைத்திடவும் அலுவலர்களுக்கு கலெக்டர் சரவணவேல்ராஜ் உத்தரவிட்டார்.

    தொடர்ந்து எருத்துகாரன் பட்டி ஊராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதியில் புதியதாக சிறுவர் பூங்கா அமைக்கப்படவுள்ள இடத்தை பார்வையிட்டு, பூங்காவிற்கு தேவையான உபகரணங்கள், குடிநீர், சுற்றுச் சுவர் மற்றும் மின் விளக்கு வசதி ஆகியவை ஏற்படுத்திட அலுவலர்களுக்கு உத்தரவு விட்டார்.

    தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தா.பழூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ் துளை கிணறு மூலம் அப்பகுதி பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்திடவும், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கழிவறை கட்டிடங்கள் கட்டிடவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    மேலும், கோடைக்காலங்களில் கால் நடைகளுக்கு தண்ணீர் கிடைத்திடும் பொருட்டு அம்பாபூர் ஊராட்சிக்குட்பட்ட விக்கிரமங்கலம் மற்றும் உல்லியக்குடி கிராமத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறையின் சார்பில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமாக கால்நடைகள் தண்ணீர் குடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளையும் பார்வையிட்டார்.

    மேலும் உல்லியக்குடி கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள உபரிநீர் செல்லும் வாய்க்கால் பணியினையும் பார்வையிட்டு, அனைத்து பணிகளும் சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்கள் விரைந்து முடிக்க வேண்டும் என கலெக்டர் சரவணவேல்ராஜ் உத்தரவிட்டார்.

    Next Story
    ×