search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் விஜயபாஸ்கர், துணைவேந்தர் கீதாலட்சுமி இன்று வருமானவரி அலுவலகத்தில் ஆஜர்
    X

    அமைச்சர் விஜயபாஸ்கர், துணைவேந்தர் கீதாலட்சுமி இன்று வருமானவரி அலுவலகத்தில் ஆஜர்

    அமைச்சர் விஜயபாஸ்கர், துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் இன்று சென்னையில் உள்ள வருமானவரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆஜராக உள்ளனர். முக்கிய தகவல்கள் வெளிவர வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறினார்கள்.
    சென்னை:

    ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்காக அதிகளவு பணப்பட்டுவாடா நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கிடைத்த தகவலின் பேரில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த 7-ந்தேதி அதிரடி சோதனை நடத்தினர்.

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி உள்ளிட்டோரின் வீடுகள் உள்பட தமிழ்நாடு முழுவதும் 35 இடங்களில் அதிரடி சோதனை நடந்தது. இதில் பல முக்கிய ஆவணங்களும், ரொக்கப்பணமும் சிக்கியது.

    இந்தநிலையில் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், துணை வேந்தர் கீதாலட்சுமி, சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமானவரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த 9-ந்தேதி சம்மன் அனுப்பினார்கள். மறுநாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் ஆஜரானார்கள்.


    இவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன. அதன்படி துணைவேந்தர் கீதாலட்சுமி மட்டும் ஆஜராகாமல் தனக்கு அனுப்பப்பட்ட சம்மனை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து துணைவேந்தர் கீதாலட்சுமியும், வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முன்பு ஆஜராகி, விளக்கம் அளித்தார். இந்தநிலையில் மீண்டும் விசாரணை நடத்துவதற்காக அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் இன்று (திங்கட்கிழமை) ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனை ஏற்று இருவரும் இன்று ஆஜராவார்கள் என்று தெரிகிறது.

    இதுகுறித்து வருமானவரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

    ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்காக வழங்கப்பட்ட பணப்பட்டுவாடா குறித்த விசாரணை மட்டும் இந்த வழக்கின் முக்கிய நோக்கம் அல்ல. சம்மன் அனுப்பப்பட்டவர்களிடம் பல்வேறு முறைகேடுகள் குறித்தும் விசாரிக்க வேண்டி உள்ளது.

    இதற்கான போதிய ஆதாரங்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் கிடைத்து உள்ளது. இதுவரை நடந்த விசாரணையில் ஆஜரானவர்கள் முரண்பட்ட பதில்களையே அளித்து உள்ளனர். உண்மை விபரங்களை அவர்களிடம் இருந்து பெறுவதற்காக தான் நாளை (இன்று) வருமானவரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆஜராக அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோருக்கு சம்மன் அனுப்பி உள்ளோம். இதனை ஏற்று, அதிகாரிகள் முன்பு ஆஜராகி உரிய பதில்களை அளிப்பார்கள். இதில் முக்கிய தகவல்கள் வெளிவரவாய்ப்பு உள்ளது.

    இந்த வழக்குகளை பொறுத்தவரையில் உடனடியாக ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பின்னர் தான் விவரங்களை அறிவிக்க முடியும். அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான புதுக்கோட்டையில் உள்ள கல்குவாரியில் மத்திய பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்தனர்.

    அதுகுறித்த ஆவணங்களும் முறையாக தாக்கல் செய்யப்பட்ட பின்னர் தான் எவ்வளவு வரிஏய்ப்பு செய்துள்ளார் என்பது தெரியவரும். பணப்பட்டுவாடா ஆவணம் விவகாரத்தில் சி.பி.ஐ. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகிய 4 விதமான விசாரணைகளை அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய உதவியாளர்களும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள். 
    Next Story
    ×