search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் இளைஞர்கள் திடீர் போராட்டம்
    X

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் இளைஞர்கள் திடீர் போராட்டம்

    நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து இன்று காலை 20 இளைஞர்கள் திடீரென நாடியம்மன் கோவில் திடலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

    இதனை எதிர்த்து நெடுவாசலில் 22 நாட்களாக நடந்த போராட்டம் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக அரசின் உத்திரவாதத்தை ஏற்று தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

    இதேபோல் நல்லாண்டார் கொல்லை, வடகாடு ஆகிய ஊர்களில் நடந்த போராட்டங்களும் கலெக்டரின் எழுத்துப்பூர்வமான உறுதிமொழியை ஏற்று விலக்கி கொள்ளப்பட்டது. ஆனால் எதிர்ப்புகளை மீறி மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

    எனவே மீண்டும் போராட்டத்தை தொடங்குவது குறித்து நெடுவாசல் பேராட்டக்குழுவினர் இரண்டு கட்ட ஆலோசனை கூட்டங்களை நடத்தினர். அதில் வருகிற 15-ந்தேதி 70 கிராம மக்களை திரட்டி அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.



    இந்தநிலையில் நெடுவாசலில் அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் 20 பேர் இன்று காலை திடீரென நாடியம்மன் கோவில் திடலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். மத்திய அரசு பொய்யான வாக்குறுதிகளை கூறி, கிராம மக்களை ஏமாற்றி போராட்டத்தை கைவிட செய்துள்ளது.

    மக்கள் எதிர்க்கும் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற மாட்டோம் என்ற உறுதி மொழியை ஏற்று நாங்கள் போராட்டத்தை கைவிட்டோம். ஆனால் தற்போது திட்டத்தை செயல்படுத்துவதில் தீவிரமாக உள்ளது. எனவே ஹட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்தால் மட்டுமே நாங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என்று அவர்கள் ஆவேசமாக கூறினர்.

    அப்போது அங்கு வந்த நெடுவாசலை சேர்ந்த போராட்டக்குழுவினர் இளைஞர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். வருகிற 15-ந்தேதி போராட்டம் குறித்த இறுதியான முடிவு எடுக்கும் வரை அமைதி காக்குமாறும், போராட்டத்தை கைவிடுமாறும் கேட்டுக்கொண்டனர்.

    இதனை ஏற்க மறுத்த இளைஞர்களிடம் கிராமத்தினர் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×