search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை கவர்னர் பதவியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை: கிரண்பேடி
    X

    புதுவை கவர்னர் பதவியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை: கிரண்பேடி

    நான் எனது தனிப்பட்ட வழக்கப்படி திருத்தங்களையும், மாற்றங்களையும் புதுவையில் கொண்டு வருவேன். இந்த பணியை நான் விரும்பி செய்கிறேன், பதவியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை என்று கிரண்பேடி கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கவர்னருக்கும், அமைச்சரவைக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்தபடி இருக்கிறது. இதனால் ஒரு நெருக்கடியான சூழ்நிலை புதுவையில் நிலவுகிறது.

    இது சம்பந்தமாக ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு கவர்னர் கிரண்பேடி பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- நகராட்சி கமி‌ஷனர் சந்திரசேகரனை மாற்றியது, பின்னர் மீண்டும் பணியில் சேர்த்தது என பிரச்சினைக்குரிய நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கிறதே? இதற்கு என்ன காரணம்?

    பதில்:- கவர்னர் மாளிகையில் ஒவ்வொரு நாளும் மாலை 4 மணியில் இருந்து 6 மணிவரை பொதுமக்கள் சந்திப்பு கூட்டம் நடந்து வருகிறது. அப்போது பொதுமக்களின் புகாருக்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    முதலியார் பேட்டை தொகுதி மக்கள் இதேபோல் வந்து தங்கள் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு இருப்பதாக கூறினார்கள். நான் நகராட்சி கமி‌ஷனர் சந்திரசேகரனை அழைத்து இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். அவர், அந்த பகுதி மக்களை அழைத்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

    அப்போது அந்த தொகுதி எம்.எல்.ஏ. குண்டர்களுடன் சென்று இடையூறு செய்து இருக்கிறார். பொதுமக்கள் பயத்தில் அங்கிருந்து ஓடி இருக்கிறார்கள். இது சம்பந்தமாக நகராட்சி கமி‌ஷனர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த கூட்டம் நடத்துவது பற்றி தனக்கு தெரிவிக்கவில்லை. தன்னிடம் அனுமதி வாங்கவில்லை என்பது எம்.எல்.ஏ.வின் குற்றச்சாட்டு.

    அரசு ஊழியர் ஒருவர் தனது கடமையை செய்வதற்கு இதுபோல் எம்.எல்.ஏ.விடம் அனுமதி வாங்க வேண்டும். அல்லது தகவல் தெரிவிக்க வேண்டும் என்று எந்த சட்ட விதிகளும் இல்லை.

    அவர் தனது கடமையை செய்து இருக்கிறார். அதிகாரி தனது பணியை செய்ததற்காக எம்.எல்.ஏ. மகிழ்ச்சி அடைந்து இருக்க வேண்டும். அவரது தொகுதியை மேம்படுத்த பணிகள் செய்வதற்காக அந்த அதிகாரிக்கு எம்.எல்ஏ. ஆதரவாக இருந்திருக்க வேண்டும்.

    ஆனால், அந்த அதிகாரியை பணி செய்ய விடாமல் எம்.எல்.ஏ. தடை ஏற்படுத்தி இருக்கிறார். மேலும் சபாநாயகரிடம் உரிமை மீறல் புகாரையும் அளித்து இருக்கிறார்.

    கே:- எம்.எல்.ஏ.வை அழைக்க வேண்டாம் என்று நீங்கள் சந்திரசேகரனிடம் கூறினீர்களா?

    ப:- எனக்கு அந்த அவசியம் இல்லை. அந்த அதிகாரியும் தனது கடமையை செய்வதற்கு எம்.எல்.ஏ.வை அழைக்க வேண்டும் என்று தேவையில்லை.

    கே:- அப்படியானால் எம்.எல்.ஏ.வை அதிகாரி புறக்கணித்தது சரி என்கிறீர்களா?

    ப:- அதிகாரி ஒருவர் தனது பணியை செய்வதற்கு எம்.எல்.ஏ.வின் அனுமதி தேவையில்லை. அது போல் ஒவ்வொரு தடவை பணி செய்யும் போதும் எம்.எல்.ஏ.விடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சட்ட விதிகள் எதுவும் இல்லை.

    கே:- உங்களுக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலுக்கு சந்திரசேகரன் கருவியாக இருக்கிறாரா?

    ப:- நான் யாரிடமும் மோதல் போக்கில் ஈடுபடவில்லை. நான் மாநிலத்தின் நிர்வாகி என்ற முறையில் எனது அதிகாரியை காப்பது எனது கடமை. தனது கடமையை நேர்மையாக, திறமையாக செய்தவரை பாதுகாப்பது எனது பணியாகும். இதை வாழ்நாளில் நான் எப்போதுமே கடைபிடித்து வருகிறேன்.

    கே:- யூனியன் பிரதேச விதி 47-ன்படி அரசு பணியாளர் சம்பந்தமான முடிவு எடுக்கும் அதிகாரம் கவர்னருக்குதான் இருக்கிறது. ஆனால், 47 (2) விதியின்படி நீங்கள் இதுபற்றி முதல்-அமைச்சருடன் கலந்து பேச வேண்டும் என இருக்கிறது. இதை ஒத்துக் கொள்கிறீர்களா?

    ப:- தலைமை செயலாளர் எனக்கு கோப்புகளை அனுப்பி இருந்தால் இதுபோன்ற கலந்தாலோசனை நடந்து இருக்கலாம்.

    ஆனால், தலைமை செயலாளர் எனக்கு கோப்புகளை அனுப்பவில்லை. என்னை புறக்கணித்து விட்டு எல்லாம் நடந்தது. எனவே, அவருடைய ஆணை செல்லாது என அறிவித்தேன். இதை மத்திய அரசும் ஒத்துக் கொண்டுள்ளது.

    தலைமை செயலாளர் அந்த கோப்புகளை எனக்கு அனுப்பி இருந்தால் அது சம்பந்தமாக நான் ஆலோசனை நடத்தி இருக்கலாம். அல்லது ஆலோசனை நடத்தாமலும் இருந்திருக்கலாம். ஆனால், நான் எழுத்து பூர்வமாக உத்தரவிட்டும் தலைமை செயலாளர் தன்னிச்சையாக நடந்து கொண்டார்.

    கே:- அரசு பணியாளர் பிரச்சினையில் யாருடைய உத்தரவு இறுதியானது? கவர்னரின் உத்தரவா? அல்லது சபாநாயகர் உத்தரவா? கமி‌ஷனர் மீது உரிமை மீறல் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியுமா?

    ப:- எல்லா கோப்புகளும் எனக்கு அனுப்பப்படும் நிலையில் இந்த கோப்பையும் எனக்கு அனுப்பி இருக்க வேண்டும். அதாவது அதிகாரியை மாற்றுவது, நியமிப்பது போன்றவற்றில் கவர்னர்தான் இறுதி முடிவு எடுக்க முடியும். இதில், ஏதேனும் சந்தேகம் இருந்திருந்தால் தலைமை செயலாளர் சட்ட ஆலோசனையை பெற்றிருக்க வேண்டும். இந்த அரசில் சட்ட செயலாளர் என்று ஒருவர் இருக்கிறார். ஏன் அவரிடம் சென்று ஆலோசனை கேட்டிருக்க கூடாது.

    கே:- நீங்கள் அமைச்சர்களின் அதிகாரங்களை பறிக்கும் வகையில் அதிகாரிகளுக்கு நீங்களே நேரடி உத்தரவு பிறப்பிப்பதாக கூறப்படுகிறதே?

    ப:- இந்த வி‌ஷயத்தில் நான் விதிகளை கடைபிடிக்கிறேன். இதில், எல்லாவற்றுக்குமே நானே பொறுப்பு. இதில் யாருக்கும் கருத்து மாறுபாடு இருந்தால் சட்டரீதியாக செய்யட்டும். எனக்கு தெரிந்த வரை சட்ட விதிகள்படி அதிகாரிகள் மாற்றத்தை சபாநாயகரோ, சட்டமன்ற உறுப்பினர்களோ செய்ய முடியாது. இது சம்பந்தமாக அவர்கள் சட்ட ஆலோசனையை பெற்றிருக்க வேண்டும். ஏன் மத்திய அரசிடம் சட்ட வழிகாட்டுதலை அவர்கள் பெற்றிருக்க கூடாது. ஒரு வி‌ஷயத்தில் பிரச்சினை ஏற்பட்டால் மத்திய உள்துறையிடம் உரிய ஆலோசனைகளை பெறலாம். அதற்கு அவர்கள் வழிகாட்டுவார்கள்.

    கே:- நீங்களும், முதல்-அமைச்சரும் இந்த வி‌ஷயத்தில் ஏன் சுமூகமாக செல்லக்கூடாது. இதனால் அதிகாரிகள் தானே பாதிக்கப்படுகிறார்கள்.

    ப:- நான் எந்த அதிகாரியையும் குறி வைக்கவில்லை. ஆனால், சில அதிகாரிகள் தங்கள் கடமைகளை மறந்து நிர்வாகத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படுகிறார்கள். அவர்களை நான் அடையாளம் கண்டு இருக்கிறேன்.

    கே:- நீங்கள் போராட்ட குணம் கொண்டவர். ஆனால், இங்கு உங்களுக்கு எதிராக அரசியல் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. எனவே, நீங்கள் ராஜினாமா செய்யும் திட்டம் எதுவும் உள்ளதா?

    ப:- நான் கவர்னராக இங்கு பணியாற்றுகிறேன். நான் ரப்பர் ஸ்டாம்பு அல்ல. நிர்வாகம், நிதி மேலாண்மை அனைத்தும் என் அதிகாரத்துக்குட்பட்டது. எனக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தின்படி நான் செயல்படுகிறேன். ஊழலற்ற தவறான நிர்வாகம் அல்லாத அரசாக செயல்பட வேண்டும் என்பதை கண்காணிப்பது எனது கடமை. அதை நான் செய்கிறேன். எனது இந்த புனித பணி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ஆனால், நான் இந்த பதவியில் எவ்வளவு காலம் நீடிக்கப் போகிறேன் என்பதை விதிதான் முடிவு செய்யும். நான் பணியை தொடருவேன்.

    நான் எனது தனிப்பட்ட வழக்கப்படி திருத்தங்களையும், மாற்றங்களையும் புதுவையில் கொண்டு வருவேன். இந்த பணியை நான் விரும்பி செய்கிறேன். சிறந்த அரசை வழி நடத்தி செல்ல வேண்டும் என்பது எனது எண்ணம்.

    இவ்வாறு கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.
    Next Story
    ×