search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை: பொதுமக்கள் தகவல் தெரிவிக்க கால அவகாசம் நீட்டிப்பு
    X

    ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை: பொதுமக்கள் தகவல் தெரிவிக்க கால அவகாசம் நீட்டிப்பு

    ஜல்லிக்கட்டு போராட்டத்தின் நடந்த வன்முறை தொடர்பாக பொதுமக்கள் தகவலை தெரிவிக்க இம்மாதம் கடைசி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது என்று விசாரணை ஆணையர் எஸ்.ராஜேஸ்வரன் கூறினார்.
    சென்னை:

    சென்னை, மதுரை, கோவை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஜனவரி மாதம் போராட்டங்கள் நடைபெற்றன. ஜனவரி 23-ந்தேதி நடந்த போராட்டத்தின் போது வன்முறை நிகழ்ந்தது. இது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் விசாரணை ஆணையராக நியமிக்கப்பட்டார்.

    வன்முறை குறித்து ஆய்வு செய்து வரும் விசாரணை ஆணையர் எஸ்.ராஜேஸ்வரன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    விசாரணை ஆணையம் சென்னையில் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலையில் (கிரீன்வேஸ் சாலை) உள்ள பொதிகை மாளிகையில் செயல்படுகிறது. இந்த முகவரியில் போராட்டம் குறித்து தனிப்பட்ட முறை யில் அறிந்தவர்கள், நேரடி தொடர்பு உடையவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் தெரிந்த தகவலை சத்தியப்பிரமாண உறுதிமொழி பத்திர வடிவில் தயாரித்து நேரடியாகவோ அல்லது தபால் மூலமாக அனுப்பி வைக்குமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டது. உறுதிமொழி பத்திரங்களை அனுப்ப கடந்த மாதம் 31-ந்தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி பொதுமக்களிடம் இருந்து 14, பாதிக்கப்பட்ட போலீசாரிடம் இருந்து 17, போலீஸ் துறையிடம் இருந்து 93, தீயணைப்பு துறையிடம் இருந்து 4 என 128 உறுதிமொழி பத்திரங்கள் பெறப்பட்டு உள்ளன. ஆனால் இது முழு விசாரணை நடத்த போதுமானதாக இல்லை. இதனிடையே உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வந்து உள்ளது. இதை ஏற்று இம்மாதம் கடைசி வரை உறுதிமொழி பத்திரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் அளிக்கப்படுகிறது.

    சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வன்முறை குறித்து கள ஆய்வு நடத்தப்பட்டன. குறிப்பாக சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் உள்ளன. இந்த போராட்டத்தில் அரசியல் கட்சிகள் பங்கு இருப்பதாக எந்த முகாந்திரமும் தெரியவில்லை.

    பொதுமக்கள் தயங்காமல் தங்களுக்கு தெரிந்த தகவல்களை ஆணையத்துக்கு உறுதிமொழி பத்திரமாக தயாரித்து அனுப்பலாம். இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கலவரத்துக்கு போலீஸ் காரணம் இல்லை என்று கூறி 17 பேரும், போலீசாருக்கு எதிராக 14 பேரும் உறுதிமொழி பத்திரங்கள் அளித்து உள்ளனர்.

    இதுதவிர 15 பேர் தங்களுடைய வீடு உள்ளிட்டவை சேதமடைந்ததால் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரி உறுதிமொழி பத்திரங்கள் தாக்கல் செய்து இருக்கின்றனர். ஆதாரத்துடன் நிரூபித்தால் இழப்பீடு பெற்று தரப்படும். அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் இதுவரை எவரும் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை.

    உறுதிமொழி பத்திரங்கள் தாக்கல் செய்தால் தான் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்ப முடியும். போராட்டத்தின் போது எடுக்கப் பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை எவரும் தாக்கல் செய்யவில்லை. தேவைப்பட்டால் பத்திரிகை மற்றும் ஊடகங்களிடம் இருந்து அதைபெற சம்மன் அனுப்பவும் திட்டம் உள்ளது. அவற்றின் உண்மை தன்மை அறியவும் நடவடிக்கைகள் எடுக்கப் படும்.

    பொதுமக்களிடம் இருந்து குறைந்த எண்ணிக்கையில் உறுதிமொழி பத்திரங்கள் வரப்பெற்றுள்ளதால், நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறிவிட முடியாது. அவர்களுக்கு சம்பவங்கள் தெரியாமல் இருக்கலாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க நீதிமன்றம் தான் ஒரேவழி என்பதை அனைவரும் உணருகின்றனர்.

    அடுத்த மாதம் (மே) 2-வது வாரத்தில் விசாரணையை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. அப்போது நீதிமன்றங்கள் விடுமுறை என்பதால் 4 மாதங்களில் விசாரணையை முடிக்க முடிவு செய்து உள்ளோம். தேவைப்பட்டால் கூடுதலாக 2 மாதம் விசாரணை நீட்டிப்பு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×