search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீனவர்கள் விரட்டியடிப்பு: இந்திய கடலோர காவல்படை தாக்கியதாக புகார்
    X

    மீனவர்கள் விரட்டியடிப்பு: இந்திய கடலோர காவல்படை தாக்கியதாக புகார்

    கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படையினர் தாக்கியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
    காரைக்கால்:

    காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்த சந்திரநாத்(30) உள்பட 17 மீனவர்கள் கடந்த 27-ந் தேதி 2 விசைப்படகுகளில் கடலில் மீன்பிடிக்க புறப்பட்டனர்.

    நேற்று மதியம் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இந்திய கடலோர காவல்படையினர் ரோந்து கப்பலில் அங்கு வந்தனர். இந்திய எல்லையை தாண்டி சென்று மீன்பிடிக்க கூடாது என்று மீனவர்களை எச்சரித்தனர்.

    பின்னர் அவர்கள் மீனவர்களை லத்தியால் தாக்கி விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சந்திரநாத் உள்பட 17 பேர் இன்று அதிகாலை 2 மணிக்கு காரைக்கால் வந்தனர்.

    இந்திய கடற்படையினர் தாக்கியதால் காயம் அடைந்ததாக சந்திரநாத், ஞானசேகரன், சரத்குமார், சத்தியநாதன், வேல்முருகன், மணிவண்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.

    நாங்கள் கோடியக்கரை அருகே கடற்பகுதியில் சர்வதேச எல்லைக்கு 2 நாட்டிக்கல் மைல் தூரத்துக்கு முன்னால் மீன்பிடித்துக் கொண்டிருந்தோம். அப்போது இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து கப்பலில் அங்கு வந்தனர்.


    இந்திய எல்லையை தாண்டி மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று எச்சரித்தனர். பின்னர் நாங்கள் சென்ற படகுக்குள் இறங்கி எங்களை லத்தியால் தாக்கி விரட்டி அடித்தனர். இதில் நாங்கள் 6 பேர் காயம் அடைந்தோம். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். நாங்கள் காரைக்காலுக்கு திரும்பி வந்து விட்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    காயம் அடைந்த 6 பேரும் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப்பின் அவர்கள் வீடு திரும்பினர்.
    Next Story
    ×