search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதாவின் வாரிசு என கூறிய நபரை கைது செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
    X

    ஜெயலலிதாவின் வாரிசு என கூறிய நபரை கைது செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு

    மறைந்த முதல்வர் ஜெயலிதாவின் வாரிசு என கூறி அவரது சொத்துக்களுக்கு உரிமை கோரி வழக்கு தொடர்ந்த கிருஷ்ண மூர்த்தி என்ற நபரை கைது செய்யுமாறு தமிழக காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    ஈரோடு மாவட்டம், காஞ்சி கோவில் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி என்பவர், தான் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா மகன் எனவும், 1986ம் ஆண்டு காஞ்சி கோவில் கிராமத்தை சேர்ந்த வசந்தாமணி என்பவருக்கு, மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். முன்னிலையில் என்னை தத்துக்கொடுத்து விட்டதாகவும், தற்போது ஜெயலலிதாவின் சொத்துக்களை தன்வசம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் கடந்த 17-ம் தேதி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுடன் தத்து கொடுக்கப்பட்டதாக சொல்லப்படும் ஆவணங்களையும் கிருஷ்ணமூர்த்தி இணைத்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி , ”போலியான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தால் மனுதாரர் சிறைக்கு செல்ல நேரிடும்” எனக் கூறி சென்னை மாநகர காவல் ஆணையர் இது தொடர்பாக விசாரணை செய்யுமாறு உத்தரவிட்டார்.

    இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் நீதிபதி மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், மனுதாரர் கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் போலியாக தயாரிக்கப்பட்டவை எனவும், கிருஷ்ண மூர்த்தியை போலீசார் உடனே கைது செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மேலும், இவ்வழக்கை அடுத்த மாதம் 10-ம் தேதி நீதிபதி ஒத்திவைத்தார்.
    Next Story
    ×