search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் அருகே மளிகை கடையில்  தீ விபத்து: ரூ.10 லட்சம் பொருட்கள் சேதம்
    X

    அரியலூர் அருகே மளிகை கடையில் தீ விபத்து: ரூ.10 லட்சம் பொருட்கள் சேதம்

    அரியலூர் அருகே மளிகை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆதிகுடிகாடு கிராமத்தை சேர்ந்தவர்  தனபால் (வயது 31). இவர் தனது வீட்டின் அருகே மளிகை கடை நடத்தி வந்தார். நேற்றிரவு  வியாபாரம் முடிந்ததும் கடையை  பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.

    இந்நிலையில் இரவு 1 மணி அளவில் தனபால் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த தனபால் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே செந்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    தீயணைப்பு அதிகாரி பழனிதுரை தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் புகழேந்தி, செல்லதுரை, பால்துரை மற்றும் காமராஜ் உள்ளிட்ட வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் வரை போராடி தீயை அணைத்தனர்.

    இருப்பினும் தீ விபத்தில் கடையில் இருந்த குளிர்பானங்கள், அரிசி மூட்டைகள், குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. அவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து  செந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

    மேலும்  தனபால் கடையில் சட்டவிரோதமாக பெட்ரோல் விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதன்மூலம் தீ விபத்து ஏற்பட்டதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×