search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கம் அருகே மர்ம காய்ச்சலுக்கு 30 பேர் பாதிப்பு: ஆஸ்பத்திரிகளில் அனுமதி
    X

    செங்கம் அருகே மர்ம காய்ச்சலுக்கு 30 பேர் பாதிப்பு: ஆஸ்பத்திரிகளில் அனுமதி

    செங்கம் அருகே மர்ம காய்ச்சலுக்கு 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள அண்டபேட்டை கிராமத்தில் கடந்த 15 நாட்களாக பொது மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்றனர்.

    இது பற்றிய தகவல் சுகாதாரத்துறைக்கு தெரியவந்தது. அவர்கள் அந்த கிராமத்துக்கு சென்று நோய் தடுப்பு நடவடிக்கையில் இறங்கினர். 3 நாட்கள் அந்த கிராமப்பகுதிகளில் கொசு மருந்து அடிக்கப்பட்டது.

    அந்த கிராம மக்கள் அந்த பகுதியில் உள்ள கிணற்று நீரை பயன்படுத்துகிறார்கள். எனவே அந்த கிணற்றில் மருந்து தெளிக்கப்பட்டு சுத்திகரிக்கும் பணி நடந்தது.

    மேலும் அந்த கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் சென்று தண்ணீர் தேங்கி நிற்கிறதா? என்று ஆய்வு செய்தனர். வீட்டின் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

    இந்த நடவடிக்கை காரணமாக அண்டபேட்டை கிராமத்தில் மர்ம காய்ச்சல் பாதிப்பு குறையவில்லை. நேற்று பலர் காய்ச்சலால் அவதிப்பட்டனர். அவர்களில் ஒரு சிலருக்கு வாந்தி, பேதி இருந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று வரை 10 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று இரவு 9 மணிக்கு மேல் தொடர்ச்சியாக வீரபாகு மகன் கோபி, பொம்மி, பாபு, சசிக்குமார், சரவணன், விமல்ராஜ், விஜயராஜ், கோவிந்தசாமி, மனோகரன், மகன் முருகன், ராஜேந்திரன் உள்பட 20 பேர் பாதிக்கப்பட்டனர்.

    அவர்கள் செங்கம், திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சேர்ந்தனர். தற்போதைய நிலவரப்படி செங்கம் அரசு ஆஸ்பத்திரியில் 20 பேரும், திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் 10 பேரும் என அண்டபேட்டையை சேர்ந்த 30 பேர் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதனால் அந்த பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். மேலும் நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தண்ணீர் காரணமாகத்தான் நோய் பரவி இருக்கும் என பொதுமக்கள் கூறுகிறார்கள். ஆனால் நோய்க்கான காரணம் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. காரணம் அறியப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×