search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதியில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அஞ்சலி
    X

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதியில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அஞ்சலி

    சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதியில் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் அஞ்சலி செலுத்தினர்.
    சென்னை:

    சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதி நினைவிடங்களுக்கு இன்று காலை ஓ.பன்னீர் செல்வம் அணியினர் வந்தனர்.

    அவர்கள் மூன்று நினைவிடங்களிலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். மதுசூதனன், ஓ.பன்னீர் செல்வம் இருவரும் வேட்பு மனுவை ஜெயலலிதா சமாதியில் வைத்து வணங்கினார்கள்.

    கட்சியின் மூத்த தலைவர்களான கே.பி.முனுசாமி, பி.எச்.பாண்டியன், நத்தம் விசுவநாதன், பொன்னையன், மைத்ரேயன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மா.பாண்டியராஜன், ஆறு குட்டி, மனோரஞ்சிதம், சண்முகநாதன், செம்மலை, மாணிக்கம் மற்றும் ஜே.சி.டி. பிரபாகரன் உள்பட ஏராளமானோர் வந்திருந்தனர்.

    அஞ்சலி நிகழ்ச்சி முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வம் தங்கள் அணி புதிய பெயரையும், கட்சி சின்னத்தையும் அறிவிப்பார் என்று எதிர் பார்க்கப்பட்டது. இதனால் ஏராளமான பத்திரிகையாளர்கள் அங்கு திரண்டனர்.

    புதிய கட்சி பெயர், சின்னம் பற்றி நிருபர்கள், ஓ.பன்னீர்செல்வத்திடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

    இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எங்கள் அணி புதிய பெயர் மற்றும் சின்னம் பற்றி தேர்தல் கமி‌ஷன் கேட்டுள்ளது.

    இதையடுத்து எங்கள் அணி நிர்வாகிகள் இன்று தேர்தல் ஆணையரை சந்திக்க உள்ளனர். புதிய கட்சியின் பெயர், சின்னம் எது என்பது பற்றி விரைவில் தெரிந்து விடும்.

    ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் மதுசூதனன் வெற்றி வேட்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

    இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

    முன்னதாக ஓ.பன்னீர் செல்வம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்த போது நிறைய பேர் அவரை போனில் தொடர்பு கொண்டு பேசியபடி இருந்தனர். நிறைய பேர் அவருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

    இடையிடையே அவர் டெல்லி சென்றுள்ள கட்சி நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு ஆலோசித்து வந்தார்.
    Next Story
    ×